அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Updated on
1 min read

நியூயார்க்: பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும் இந்தியாவின் ஆதரவினை மீண்டும் உறுதிபடுத்தினார்.

இதுகுறித்து ஜெலான்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள பதிவில், “நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். இரண்டு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் நான் உக்ரைன் சென்றபோது எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் உறுதி எடுத்துக்கொண்டோம். உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு இந்தியாவின் முந்தைய ஆதரவு தீர்மானத்தை மீண்டும் வழியுறுத்தினோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மூன்றுநாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அதன் இரண்டாவது பகுதியில் நியூயார்க் சென்றார். அங்கு சர்வதேச போர் பதற்றங்களுக்கு மத்தியில் எதிர்காலம் குறித்து ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.

இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதிக்கான உறுதியான ஆதரவுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியுடன் இந்தாண்டு நடக்கும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் எங்களின் உறவுகளை தீவிரமாக வளர்த்து வருகிறோம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக செல்பட்டு வருகிறோம்.

எங்கள் உரையாடல்களில், சர்வதேச தளத்தில் குறிப்பாக ஐ.நா மற்றும் ஜி20 எங்களின் உறவுகளை மேம்படுத்துவது, உலக அமைத்திக்கான விஷயங்களை செயல்படுத்துவது, அமைதிக்கான இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு தயாராவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதிக்கான உறுதியான ஆதரவுக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in