

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி இன்று கடலுக்கு அடியில் தொடங்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால் அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விமான தேடல் பணியின் ஒருங்கிணைப்பாளர் ஆங்கஸ் அவுஸ்டன் கூறும்போது, "இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் நீர்மூழ்கி கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலும் இணைந்து இன்று கடலுக்கடியில் விமானத்தின் கருப்புப் பெட்டி மூலம் வெளிவரும் சிக்கனல்களை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது" என்றார்.
விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள பேட்டரி ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் செயலிழந்துவிடும் என்று நம்பப்படுகிறது. விமானத்தின் பாகங்களை தேடும் பணி 2,17,000 சதுர கீ.மீ அளவில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்தத் தேடலில் எந்த லாவகமான தடயங்களும் கிட்டவில்லை என்பதால் தேடல் பகுதி ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் சுருக்கிக் கொள்ளப்பட்டு, குறுகிய எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்டது. தேடல் பணியில் மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஈடுப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பெர்த் ராணுவத் முகாமில் அந்நாட்டின் பிரதமர் டோனி அபாட் கூறுகையில், "காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை.
எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்" என்றார் அவர்.
கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.