Published : 23 Jun 2018 11:35 AM
Last Updated : 23 Jun 2018 11:35 AM

அப்படி அமெரிக்காவில் என்ன தான் இருக்கிறது? - கனவு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிக்கிய இந்தியர்கள்

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 1940 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு வலுத்ததால் குழந்தைகளைப் பெற்றோரிடம் சேர்க்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 100 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு நியூ மெக்ஸிகோ மற்றும் ஒரிகானில் உள்ள மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் சீக்கியர்கள். இந்தியாவில் இருந்து அதிகமாக சீக்கியர்களே அமெரிக்காவுக்கு செல்ல முற்படுகின்றனர்.

அமெரிக்க கனவு

நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏராளமான சீக்கியர்கள் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கேயே தங்கி விட்டனர். அங்கு வெற்றிகரமாக வரத்தகம் செய்யும் இவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளனர் இதன் தொடர்ச்சியாகவே பஞ்சாபில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். படித்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்றவர்களுக்கு அமெரிக்கா செல்ல எளிதில் விசா கிடைத்து விடுகிறது.

ஆனால் ஹோட்டல் போன்ற வணிகம் செய்யும் நோக்கத்துடன் அங்கு செல்ல விரும்பும் பஞ்சாபியர்களுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் அங்கு செல்ல முற்படுகின்றனர். பல நாடுகளுக்கு மாறி மாறி சென்று, அமெரிக்க விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. இவ்வாறு சட்டவிரோதமாக செல்பவர்களை அழைத்து செல்ல பஞ்சாபில் பெரிய குழுக்கள் செயல்படுகின்றன.

இவர்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய பல லட்சம் செலவு செய்கின்றனர். பூட்டே சிங் என்பவர் சமீபத்தில் 47 லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த ஏஜெண்டுகள் மூலம் அமெரிக்கா செல்ல முற்பட்டார். ஆனால் அமெரிக்கா குடியேற்ற அதிகாரிகள் கையில் சிக்கி தற்போது அங்கு ‘கம்பி’ எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சட்டவிரோத குடியேற்றம்

சிறையில் இருந்து வர அவருக்காக அங்கு வழக்கும் நடக்கிறது. குடியேற்ற அதிகாரிகள் கையில் சிக்கி சிறை சென்ற பஞ்சாபியர்களை மீட்க அமெரிக்காவில் பெரிய குழுவே செயல்படுகிறது. இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வழக்கு நடத்தி அவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

இந்தியாவில் சீக்கிய சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் செயல்படு பூட்டே சிங் அமெரிக்க நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு சட்டவிமோதமான முறையிலாவது எப்படியாவது அமெரிக்கா சென்று விட வேண்டும் என்ற ஏக்கம் சீக்கிய இளைஞர்களிடம் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் என பலரும் அமெரிக்கா சென்று பெரிய வர்த்தகர்களாக, குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்களாக வலம் வருவதை பார்த்து இளம் சீக்கியர்கள் மத்தியில் இந்த ஆசை பெருகி வருவதாக கூறப்படுகிறது.

கடுமை காட்டும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ வழியாக தஞ்சம் புகும் அகதிகளை தடுத்து நிறுத்தி கைது செய்வதுடன் அவர்களின் குழந்தைகளையும் பிரித்த கொடுமை படுத்த உத்தரவிட்டார்.

அமெரிக்காவில் தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்தியர்களின் குழந்தைகள் தனியாகப் பிரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களை மீட்கவும், தாய் நாட்டிற்கு அழைத்து வரவும் வெளியுறவு அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x