Published : 06 Jun 2018 10:20 AM
Last Updated : 06 Jun 2018 10:20 AM

மார்பக புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை: 3 மாதமே வாழ்வார் என்று கணிக்கப்பட்ட பெண் முழுமையாக குணமடைந்தார்

அமெரிக்காவில் மார்பக புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களே உயிர் வாழ்வார் என்று கணிக்கப்பட்ட பெண் இந்த கிசிச்சையின் மூலம் முழுமையாக குணமடைந்துள் ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போர்ட் செயின்ட் லூசி நகரைச் சேர்ந்தவர் ஜூடி பெர்க்கின்ஸ் (52). இன்ஜினீய ரான அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2003-ல் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் அவருக்கு மீண்டும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மேரிலேண்டில் உள்ள தேசிய புற்று நோய் மையத்தில் அவர் சிகிச்சை பெற்றார்.

வெள்ளை அணுக்கள் உற்பத்தி

கடந்த 2015-ல் அவரது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவுக்கு புற்றுநோய் கட்டிகள் இருந்ததும் உடல் முழுவதும் புற்றுநோய் பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தீவிரமாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனிக்கவில்லை. 3 மாதங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என்று கணிக்கப்பட்டது.

எனினும் நம்பிக்கையை தளரவிடாத மருத்துவர்கள், ஜூடி பெர்க்கின்ஸின் புற்றுநோய் கட்டி மாதிரிகளையும் அதன் மரபணுவையும் ஆய்வு செய்தனர். அதன்பின் புதிய முயற்சியாக ஜுடியின் உடலில் இருந்து புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டன. அவை ஆய்வகத்தில் 9,000 கோடி வெள்ளை அணுக்களாகப் பெருக்கப்பட்டு மீண்டும் ஜுடியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்பட்டன.

ஒரு வாரத்தில் ஜூடியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஓராண்டில் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டார். மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில் 3 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று கணிக்கப்பட்ட ஜுடி முழுமையாக குணமடைந்திருப்பது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜூடி நல்ல உடல் நிலையுடன் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, “கடந்த 2015-ல் நான் சாகப் போகிறேன் என்று தெரிந்ததும் வேலையை ராஜினாமா செய்தேன். நாள்தோறும் வலியால் துடித்தேன். குடும்பத்தை நினைத்து, குறிப்பாக மகன்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டேன். கடவுளின் அருளாலும் மருத்துவர்களின் முயற்சியாலும் உயிர் பிழைத்தேன். தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

ஜுடிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஸ்டீபன் ரோசன்பர்க் கூறியபோது, உலகில் முதல்முறையாக புதிய சிகிச்சை முறையால் மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறையால் அதிகமான நோயாளிகள் பயன் அடைவார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x