

தென் சீனக் கடலில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா விட்டுக் கொடுக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மத்திஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜேம்ஸ் மத்திஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஜி ஜின்பிங் பேசும்போது,
"சீனா அதன் பிராந்தியத்தில் அமைதியையே விரும்புகிறது. பிராந்திய பிரச்சனைகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சினைகளில் சீன எந்தவித சலுகையும் காட்டாது. நாங்கள் தென் சீன கடலில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டு தரமாட்டோம்" என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு குறித்து ஜேம்ஸ் மத்திஸ் கூறும்போது, "ஜி ஜின்பிங்குடனான பேச்சு வார்த்தை நல்ல முறையில் இருந்தது. சீனாவும், அமெரிக்காவும் ராணுவத்துக்கு முக்கியதுவம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
முன்னதாக தென் சீனக் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை சீனா நிறுத்தியது.
இதற்கு அமெரிக்கா புகார் தெரிவித்திருந்தது. பல நாடுகளின் குற்றச்சாட்டுக்குப் பிறகு தென் சீனக் கடலில் ஆயுதங்களை சீனா அகற்றிய நிலையில் மீண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை சீனா நிறுத்தியது.
யாங்ஜிங் தீவில் தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளதாக இஸ்ரேலைச் சேர்ந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் எடுத்த செயற்கைகோள் படங்களில் இது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே ஏவுகணைகள் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை அந்த உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இத்தகைய பதிலை சீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.