

இந்தியர் உள்பட 3 பேரது பெயர்களை இலங்கை அரசு தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தலையெடுக்க வைக்க முயற்சி மேற்கொள்பவர்கள் என்று கூறி பலரது பெயரை இலங்கை அரசு தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இந்தியாவில் வசிக்கும் 34 பேர் உள்பட 424 பெயர்களும், 15 அமைப்புகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதில் 32 பேர் தமிழகத்தில் அகதிகள் என்ற பெயரில் இருப்பதாக இலங்கை அரசு ஏற்கெனவே கூறியுள்ளது.
இலங்கையில் மீண்டும் தீவிரவாத இயக்கத்தை வளர்க்க முயற்சிக்கும் இவர்களுடன் பொதுமக்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து இந்தியர் உள்பட 3 பேரது பெயரை இலங்கை அரசு நீக்கியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கப்
பட்டதை அடுத்து அவர்களது பெயர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி நீக்கப்பட்டதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூர்யா கூறியுள்ளார். எனினும் நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.