

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக அந்நாட்டு சூபி முஸ்லிம் மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி 24 மணி நேர கெடு விதித்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானில் நவாஸ் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நவாஸ் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் பதவி விலக வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கடந்த 15 நாள்களாக முற்றுகையிட்டுள்ளனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் நவாஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசுத் தரப்புக்கும் போராட்டக்கா ரர்களுக்கும் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தரப்பு ஒப்புக் கொண்டது. ஆனால் நவாஸ் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தலையிட்டுள்ளதால் பாகிஸ் தானில் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இம்ரான் கான் கட்சியி்ன் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி, காத்ரியை சந்தித்துப் பேசினார். அரசுக்கு எதிராக அடுத்த கட்டமாக போராட்டத்தை எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது குறித்து இருவரும் விவாதித்தனர். இதன் பிறகு நவாஸ் பதவி விலக 24 மணி நேரம் கெடு விதிப்பதாக காத்ரி அறிவித்தார்.
போராட்டத்தை லாகூர், கராச்சி, பைசாலாபாத், முல்தான் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
கைது வாரண்ட்
இந்நிலையில் காத்ரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 71 பேருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 5-ம் தேதிக்குள் இவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 22, 29-ம் தேதிகளிலும் காத்ரிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் ஆதரவாளர்களுக்கு மத்தியில் போராட்டக்களத்தில் இருந்ததால் போலீஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.
ஆகஸ்ட் 8-ம் தேதி அரசுக்கு எதிராக காத்ரி ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது போலீஸார் பலர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதையடுத்து காத்ரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 71 பேர் மீது போலீஸார் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில்தான் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் மீது குற்றச்சாட்டு
அரசியல் சிக்கலை தீர்க்க ராணுவத்தின் உதவியை தான் கேட்டதாக வெளியான தகவலை நவாஸ் ஷெரீப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இம்ரான் கானும், காத்ரியும் தான் ராணுவ தளபதியை சந்திக்க வேண்டுமென்று கூறினர். அதற்கு மட்டும் ஒப்புதல் அளித்தேன் என்று நவாஸ் கூறியுள்ளார்.
ஆனால் நவாஸின் இந்த பேச்சை இம்ரான் கான், காத்ரி ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ராணுவ தளபதியை சந்திக்க வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை. இந்த விஷயத்தில் நவாஸ் கூறுவது பொய் என்று அவர்கள் கூறியுள்ளனர்.