Published : 28 May 2018 07:39 AM
Last Updated : 28 May 2018 07:39 AM

உலகின் 4-வது விண்வெளி வீரராக நிலவில் இறங்கிய ஆலன் பீன் மரணம்

நிலவில் 4-வது விண்வெளி வீரராக இறங்கி கால் பதித்த ஆலன் பீன் காலமானார். அவருக்கு வயது 86.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2-வது முறையாக கடந்த 1969-ம் ஆண்டு அப்போலோ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதில் ஆலன் பீனும் சென்றார். நிலவில் தரையிறங்கி கால் பதித்தார். அதன்மூலம் நிலவில் இறங்கிய 4-வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. நிலவில் 31 மணி நேரம் இருந்து, அங்குள்ள பாறைகள், மண் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆலன் பீன், ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. இவருக்கு லெஸ்லி பீன் என்ற மனைவி இருக்கிறார். ஆலன் பீன் மறைவை நாசா உறுதிப்படுத்தியது. நிலவுக்கு இதுவரை 12 பேர் சென்று வந்துள்ளனர். ஆலன் மறைவையடுத்து தற்போது 4 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.

அப்போலோ விண்வெளி பயணம் மட்டுமன்றி, அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ‘ஸ்கைலேப்’ ஆய்வு கூடத்துக்கும் கடந்த 1973-ம் ஆண்டு ஆலன் பீன் சென்றார். அங்கு 59 நாட்கள் தங்கி பூமியை சுற்றிவந்தார். கடந்த 1981-ம் ஆண்டு நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கேன்வாஸில் ஓவியங்கள் வரைவதில் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார்.

ஆலன் பீன் மறைவுக்கு நாசாவும், முன்னாள் மற்றும் இந்நாள் விண்வெளி வீரர்களும் விஞ்ஞானிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். - ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x