

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டுமென்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசுத் தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை முதல் கட்ட பேச்சு தொடங்கியது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் போராட்டத்தில் குதித்துள்ளார். இம்ரான் கானும், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு பேரணியைத் தொடங்கினர்.
தற்போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர். நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் உள்பட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி, உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து விட்டனர். நாடாளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதையடுத்து எதிர்ப்பாளர்களுடன் பேச்சு நடத்த நவாஸ் முன்வந்தார். இந்நிலையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இரு எதிர்க்கட்சி குழுவினர் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பினர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இது குறித்து அமைச்சர் அசன் இக்பால் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்றதன்மை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
பிரச்சினைகளுக்கு விரைவில் சுமுகமான தீர்வு காண்போம் என்றார். அவருடன் இம்ரான் கான் கட்சியின் பிரதிநிதியும் இருந்தார். நாடாளுமன்றம் நிராகரிப்பு நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டுமென்ற எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அதிபர் மம்மூத் ஹுசைனை பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். நவாஸுடனான சந்திப்பை இம்ரான் கான் திடீரென ரத்து செய்துள்ளார்.