Published : 22 May 2018 08:38 AM
Last Updated : 22 May 2018 08:38 AM

அருணாசல பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் சீனா: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு

அருணாசலபிரதேசத்தை ஒட்டிய பகுதியில் சீனா மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தைத் தோண்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாசலபிரதேச எல்லை யில் லுன்சே என்ற இடத்தில் ரூ.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருவதாகத் தெரியவந்துள்ளது.

சீன எல்லையில் சுரங்கம் தோண்டி சுரங்கம் வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளது சீனா. இந்தியப் பகுதிக்குள் பரவியுள்ள அந்தச் சுரங்கத்தைக் கையகப்படுத்தும் சீனாவின் முயற்சியால் அந்நாட்டுடன் இந்தியாவுக்கு மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே டோக்லாம் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா, சீனா அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், சீனா - இந்தியா இடையே தங்கச் சுரங்கம் தோண்டி வருவதால் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதிக்கும், இந்தியாவில் அருணாசலபிரதேசத்துக்கும் இடையே தங்கச் சுரங்கத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. சுரங்கத்தின் கீழ் டன் கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வேறு சில மதிப்புமிக்க உலோகங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த சுரங்கத்தின் பெரும்பகுதி இந்தியப் பகுதிக்குள் உள்ளது. இங்குள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடி எனத் தெரிகிறது.

ஆனால், இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் அங்கு தங்கச் சுரங்கத்தை வெட்டித் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருவதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தங்க பாளங்கள் பரவியிருக்கும் பெரும்பாலான பகுதிகள் இந்தியப் பகுதிகளில் உள்ளன. எனவே அப்பகுதிகளில் சுரங்கத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் வேகப்படுத்தி வருகிறது சீன அரசாங்கம்.

இதுதொடர்பாக சீன வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் லு காங் கூறும்போது, “திபெத்தை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டி வருவது சரியானதுதான். இந்தப் பகுதியில் சுரங்கம் அமைத்து தங்கம் வெட்டியெடுக்கு எங்களுக்கு முழு இறையாண்மை உரிமை உள்ளது.

தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை இந்தியா பரப்புவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லையில் அமைதி நிலவுவதை இரு நாடுகளும் உறுதி செய்யவேண்டும்” என்றார். இந்தத் தகவல் ஹாங்காங்கைச் சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

சீனாவின் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் சந்தித்து பேசியபோது இதுதொடர்பான எதிர்ப்பு இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது சுரங்கம் அமைக்கும் பணிகளை சீனா தீவிரமாக்கி வருவதால் இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x