Published : 23 May 2018 09:08 AM
Last Updated : 23 May 2018 09:08 AM

நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் போம்பியோ எச்சரிக்கை

ஈரான் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற மைக் போம்பியோ வாஷிங்டனில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேஷனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய வேண்டுமானால், அந்த நாடு தனது உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏமன் மற்றும் சிரியாவில் உள்ள தனது படைகளையும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளையும் வாபஸ் பெற வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற 12 நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கூறும்போது, “ஈரான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்க நீங்கள் யார்? அமெரிக்காவின் நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உலக நாடுகளுக்கு சுதந்திரம் உள்ளது. அமெரிக்காவின் இதுபோன்ற எத்தனையோ மிரட்டல்களை ஈரான் மக்கள் கேட்டுள்ளனர். இதுபற்றி கவலைப்படத் தேவையில்லை” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x