Published : 15 Aug 2014 12:00 AM
Last Updated : 15 Aug 2014 12:00 AM

இந்திய வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது: பான் கி-மூன் புகழாரம்

முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

“முதலாம் உலகப்போரில் இந்திய போர் நினைவுகள்” என்ற பெயரில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், நியூயார்க் நகரில் அண்மையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரிட்டிஷ் அரசின் சார்பில் சுமார் 10 லட்சம் இந்திய வீரர்கள் முதலாம் உலகப்போரில் பங்கேற்றனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த மாபெரும் தியாகத்தை வரலாறு கவனிக்கத் தவறிவிட்டது. இரண்டு உலகப் போர்களை பார்த்துவிட்டோம். ஹிரோஷிமா உள்ளிட்ட பேரழிவுகளையும் கண்கூடாக பார்த்துவிட்டோம். ஆனாலும் இன்றைய உலகின் நிலைமை மாறவில்லை.

1915-ம் ஆண்டில் கர்வாலி வீரர் ஒருவர் எழுதிய கடிதத்தை இப்போது நினைவுகூர்கிறேன். பனிமழை போல் துப்பாக்கி குண்டுகள் பொழிகின்றன. போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை கணக்கிடக்கூட முடியவில்லை என்று அந்த கர்வாலி வீரர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஏராளமான ரத்தத்தைச் சிந்திவிட்டோம். இனியும் ரத்தம் சிந்தக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி பேசியபோது, வருங்கால தலைமுறைகளை போரில் இருந்து காக்க வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x