Published : 24 May 2018 08:51 AM
Last Updated : 24 May 2018 08:51 AM

உலக மசாலா: கோடீஸ்வரரின் திருமணம்

ஷ்யாவைச் சேர்ந்த 54 வயது கான்ஸ்டான்டின் ஷெர்பினின், மிகப் பெரிய கோடீஸ்வரர். எண்ணெய் வியாபாரம் செய்கிறார். தன் குழந்தைகள் மூலம் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ‘கோடீஸ்வரரின் திருமணம்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோவாக மாற்றிவிட்டது! 2 ஆயிரம் பெண்களில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இந்தப் பொறுப்பை கோடீஸ்வரரின் 3 மகள்களும் ஒரு மகனும் செய்து முடித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். போட்டியாளர்கள் இதுவரை திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். கான்ஸ்டான்டின் குழந்தைகளை, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும். இவர்களில் பெரும்பாலானோர் அழகு, வயது காரணமாக முதல்கட்ட தேர்வில் வெளியேற்றப்பட்டனர். 16 வயது மகள், “40 வயதாகும் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்? என் அப்பாவுக்கு இளமையான மனைவி வேண்டும். உங்களைப் பார்த்தால் எங்களுக்கே சலிப்பாக இருக்கிறது” என்றெல்லாம் சொல்வதுபோல் நாகரிகமற்ற முறையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. “நான் கூடைப்பந்து வீராங்கனை. உயரமாக இருப்பேன். என் அப்பாவுக்கு உயரம் பிடிக்கும்தான். ஆனால் இவ்வளவு உயரம் தேவையில்லை. நீங்கள் கிளம்பலாம் என்று 20 வயது பெண் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்” என்கிறார் இகாடெரினா. “இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. போட்டியாளர்கள் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். எல்லாவற்றிலும் வெற்றி பெறும் பெண், கோடீஸ்வர வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்றவராக இருந்தால் மணமகளாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதைக் கான்ஸ்டான்டின் குழந்தைகள்தான் முடிவு செய்வார்கள்” என்கிறது தொலைக்காட்சி நிறுவனம். கான்ஸ்டான்டின் இதுவரை 5 திருமணங்கள் செய்து, 5 முறை விவாகரத்தும் பெற்றுவிட்டார். 3 பெண்களுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார். அதுவும் ஒத்துவரவில்லை என்றதும், தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் குழந்தைகளிடம் விட்டுவிட்டார்.

தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இப்போ வியாபாரம் ஆயிருச்சு!

சீ

னாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடனை திருப்பித் தராதவர்களிடமிருந்து வித்தியாசமான முறையில் வசூலிக்கிறார்கள். திரையரங்கில் திரைப்படம் போடுவதற்கு முன்பு, அந்தப் பகுதி யில் வசிக்கும் கடன்காரர்களின் படங்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிடுகிறார்கள். அதைப் பார்க்க நேரும் கடன்காரர்கள் கூனிக் குறுகிப் போகிறார்கள். “இப்படிப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் கடன்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பெரும் தொழிலதிபர்கள். அவர்களால் கடனைச் செலுத்த முடியும். ஆனாலும் செலுத்துவதில்லை. இப்படி விளம்பரம் செய்யும்போது வெகு வேகமாகக் கடனை அடைத்து விடுகின்றனர். இன்னும் சில நகரங்களில் போஸ்டர், பில்போர்ட், எலக்ட்ரானிக் ஸ்க்ரீன், பேருந்து பின்பக்கம் என்று பல்வேறு வகைகளில் கடன்காரர்களின் படங்களை வெளியிட்டு, கடனை வசூலிக்கின்றனர்” என்கிறார் சட்ட நிபுணர் லி க்வாங்.

கொஞ்சம் நாகரிகமாக வசூலிக்க முடியாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x