Published : 24 May 2018 12:07 PM
Last Updated : 24 May 2018 12:07 PM

கிம் ஜோங் நடவடிக்கையில் மாற்றம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் வடகொரியா - அமெரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் இந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடகொரியா - அமெரிக்கா இடையே மீண்டும் கருத்து மோதல்கள் ஏழத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளுக்கு வடகொரியா சம்மதிக்கவில்லை என்றால் லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமைதான் கிம்முக்கும் ஏற்படும் என்று ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளரிடம் ட்ரம்ப் பேசும்போது,  "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு வடகொரிய அதிபர் கிம்மின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகின் சிறந்த போக்கர் பிளேயர் (சூதாட்டத்தில் ஈடுபடும் திறமைமிக்க வீரரைக் குறிக்கும்). ஜி ஜின்பிங், கிம்மிடம் ஏதும் சொல்லாமலும் இருந்திருக்கலாம். நான் யாரையும் குறை கூறவில்லை. ஆனால் கிம்மின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

வெள்ளை மாளிகை பத்திரிகைச் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, "வடகொரியா சிங்கப்பூரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க விரும்பினால் நாங்களும் அவர்களை சந்திக்கத் தயாராகத்தான் இருக்கிறோம்” என்றார்

முன்னதாக, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஜான் போல்டன் கூறிய சில கருத்துகளால் அமெரிக்கா - வடகொரியா இடையே நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் வடகொரியா விலக நேரிடும் என்று வடகொரியா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x