அமெரிக்க அதிபர் வேட்பாளர் ரேஸில் கமலா ஹாரிஸ் - ஒபாமா நிலைப்பாடு என்ன?

கமலா ஹாரிஸ் - பராக் ஒபாமா
கமலா ஹாரிஸ் - பராக் ஒபாமா
Updated on
1 min read

சிகாகோ: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரம், வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் கண்டால், தேர்தலில் அவரை வீழ்த்துவது எளிது டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒபாமா நிலைப்பாடு என்ன? - பைடன் விலகலை அடுத்து தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென ஆதரவு கோரப்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்களிடம் இது தொடர்பாக பேசி வருகின்றனர். குறிப்பாக அவருக்கு யாரும் போட்டியாக களம் காணாத வகையில் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கமலா ஹாரிஸுக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானாலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் தலைவர் சக் ஷுமர் ஆகியோர் கமலா ஹாரிஸ் குறித்த தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களான இவர்களின் ஆதரவு என்பது மிகவும் முக்கியம்.

மேலும், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் 19 முதல் 22 வரை ஒபாமாவின் சொந்தப் பகுதியான சிகாகோவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தான் கமலா ஹாரிஸுக்கு ஒபாமாவின் ஆதரவு என்பது முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை பொறுத்தவரை, பைடன் விலகலை அடுத்து அவரை வாழ்த்தினாலும், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றி பெலோசி எதுவும் பேசவில்லை.

அதேநேரம், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் வெளிப்படையாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். செனட் உறுப்பினர் ரோ கன்னா அதிபர் வேட்பாளர் தேர்வுக்கு கமலா ஹாரிஸ் சரியான நபர் கூறியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வில், கமலா ஹாரிஸுக்கான ஆதரவு, இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆகஸ்ட் 19 முதல் 22 வரை நடக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டையொட்டியே, கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது தெரியவரும்.

இதற்கிடையே, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸ் பெயருடன் கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரேட்சன் விட்மெர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in