வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
Updated on
1 min read

டாக்கா: வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக அங்கு வன்முறை நடைபெற்றுவரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல், 24 மணி நேர அவசரகால எண்களையும் அறிவித்துள்ளது.

டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழலைக் கருதத்தில் கொண்டு இங்குள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் இந்திய மாணவர்கள் பயணங்களைத் தவிர்க்குமாறும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதாவது அவசர நிலை மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தூதரகம் மற்றும் துணை தூதரக அதிகாரிகளை அணுகவும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீட்டை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸாரின் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஆசிஃப் முகமது தனது முகநூல் பதிவொன்றில், "மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் அந்த அமைப்பு, “அனைத்து கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் தங்களின் கோரிக்கைக்கு ஆதாரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகத்தின் முன்பு கலவரத் தடுப்பு முன்னேற்பாடுகளுடன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு முக்கியமான நகரங்களில் பாதுகாப்புக்காக வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை துருப்புக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in