

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட ஜூலியான் அசாஞ்சே கடந்த இரண்டு ஆண்டு காலமாக லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், 49 வயதான ஜூலியான் அசாஞ்சேவுக்கு இதய நோயும், நுரையீரல் நோயும் ஏற்பட்டுள்ளது. நோயின் தாக்கம் அதிகமாகியிருப்பதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தூதரகத்தில் இருந்து விரைவில் வெளியேற இருப்பதாக அசாஞ்சே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஈகுவேடார் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ பாடினோவும் உடன் இருந்தார். அவர் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அசாஞ்சே இத்தூதரகத்திலேயே முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இப்போது மிகவும் அவசியம். அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அசாஞ்சேவை ஸ்வீடன் அரசு கைது செய்ய உத்தரவிட்டது. ஆனால், தன்னை போலி குற்றச்சாட்டில் கைது செய்து ஸ்வீடன் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்ற அச்சத்தால், அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.