Published : 19 May 2018 08:18 AM
Last Updated : 19 May 2018 08:18 AM

‘ஜினா ஹாஸ்பல்’ - அமெரிக்கா விடுக்கும் சவால்

மெரிக்க ‘செனட்’ ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்தார். வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், நீக்கப்பட்டு, அமெரிக்க உளவுத் துறையின் இயக்குநர் மைக் பாம்பியோ அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். உளவுத் துறையின், துணை இயக்குநராக இருந்த ‘ஜினா ஹாஸ்பல்’, அத்துறையின் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க செனட்டின் ‘உளவுக் குழு’ கூடி, 10 - 5 என்கிற எண்ணிக்கையில் ஜினா ஹாஸ்பல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ‘சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கள அலுவலராக இருந்த ஒருவர் இயக்குநராக உயர்கிறார். முதன்முறையாக, உலகின் அதி சக்தி வாய்ந்த உளவு அமைப்புக்கு, பெண் தலைமை கிடைத்து இருக்கிறது. ‘மாதர் தலைமை’ - மகிழ்ச்சியும் பெருமையும் தர வேண்டிய செய்தியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், ‘ஹாஸ்பல்’ பெற்று இருக்கிற உயர்வு, உண்மையில் நல்ல செய்திதானா...? அவரது பின்னணி என்ன சொல்கிறது...?

62 வயதாகும் ஹாஸ்பல், 1985-ல் உளவுத்துறையில் சேர்ந்தார். ‘தேசிய ரகசிய நடவடிக்கைப் பணி’ உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த காலம். தாய்லாந்து நாட்டில், ‘கருப்புக் கொட்டகை’யின் துணை இயக்குநராக, சிறப்புப் பணியில் இருந்தார் ஹாஸ்பல். அங்கே அடைத்து வைக்கப்பட்டு இருந்த ‘அல்-காய்தா’ தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட இருவர் மீது, இவர் தலைமையில் ‘தண்ணீர் தண்டனை’ ஏவி விடப்பட்டது. கைதிகளின் கை கால்கள் கட்டப்பட்டு, அவர்களின் முகத்தைத் துணியால் மூடி, தலையில் தண்ணீர் ஊற்றப்படும். நீரில் மூழ்கிப் போகிற ‘உணர்வு’ ஏற்படுமாம். நிரந்தரமாக எலும்பு, நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். உளவியல் ரீதியாகவும் மோசமான பின்விளைவுகள் உண்டாகும். மழை நீர் மேலே பட்டாலும் கூட, மரண பயம் ஏற்படுமாம். இவையெல்லாம் நாகரிக சமுதாயம் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத, விசாரணை வழிமுறைகள்.

ஜினா ஹாஸ்பல், இவ்வகை விசாரணைகளுக்குப் பெயர் பெற்றவர். இவருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் உள்ளன. இத்தகைய பின்னணி உள்ள ஒருவரை அமெரிக்க உளவுத் துறையின் இயக்குநராக தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிபர் ட்ரம்ப் என்ன சொல்ல வருகிறார்...? ‘தீவிரவாத ஒழிப்பு’ என்கிற பெயரில் எந்த உரிமை மீறலையும் நியாயப்படுத்துகிற போக்கு, உலகம் முழுவதுமே அரங்கேறி வருகிறது. இவற்றுக்கெல்லாம், ஹாஸ்பல் நியமனம் மூலம் ஓர் அங்கீகாரம் தரப்பட்டு இருக்கிறது.

தவறான தேர்வு என்று தெரிந்தே அமெரிக்க அதிபர், ஹாஸ்பல் பெயரை முன் மொழிந்து இருக்கிறார். வரும் காலத்தில், அமெரிக்க உளவுத் துறையின் ‘பங்கு’, கணிசமாக இருக்கும் என்று ட்ரம்ப் எதிர்பார்ப்பது போன்றே தோன்றுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வட கொரியா - அமெரிக்கப் பேச்சு வார்த்தையில் சில தடங்கல்கள் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதக் குவிப்புக்கு எதிராக, அமெரிக்கா தன்னிச்சையாக அறிவிக்கும் எந்தத் திட்டத்தையும், அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை; லிபியா, இராக் நாடுகளுக்கு நேரிட்ட கதியை எங்கள் மீதும் திணிப்பதற்கான மறைமுக செயல் திட்டம் தெரிகிறது; இதற்குக் கட்டுப்பட மாட்டோம்' என்று அறிவித்து இருக்கிறார் வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் கிம் கை க்வான்.

திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறுமா...? “நம்பிக்கையுடன் இருக்கிறோம்; ஒருவேளை, பேச்சுவார்த்தை நடைபெறா விட்டால்தான் என்ன...? அப்போதும் எல்லாம், நன்றாகத்தான் இருக்கும்” என்று சர்வ சாதாரணமாகக் கூறுகின்றனவாம் வெள்ளை மாளிகை வட்டாரங்கள்.

இந்தப் பின்னணியில், ஜினா ஹாஸ்பல், உளவுத்துறைக்குப் தலைமைப் பொறுப்பு ஏற்க இருக்கிறார். சம யோசிதத்துடன் கன கச்சிதமாகக் காய் நகர்த்தி இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவிலேயே ட்ரம்ப் செயல்களுக்குக் கண்டனங்கள் எழுந்து கொண்டுதான் உள்ளன. ‘நெறிமுறைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளால் அமெரிக்க ஜனநாயகம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது’ என்கிறார் முன்னாள் அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x