

ஹாங்காங்: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கின் டய் போ பகுதியில் உள்ள வாங் பக் கோர்ட் வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 31 மாடிகள் உள்ளதால் அங்கு 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. இங்கு பராமரிப்பு பணிக்காக கட்டிடங்களை சுற்றி சாரங்கள் அமைக்கப்பட்டு தார் பாலின் மூலம் மறைக்கப்பட்டிருந்தன. இதனால் இங்கு ஒரு இடத்தில் பற்றிய தீ 7 கட்டிடங்களுக்கு மளமளவென பரவியது.
இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. 79 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 200 பேரை காணவில்லை. இந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 900 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களைச் சுற்றி 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்து சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கிரிஸ் டாங்க் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்டிடங்களில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. இங்கு தேடுதல் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். கட்டிடத்தில் வெப்ப நிலை குறைந்ததும், அங்கு போலீஸார் சென்று தீ விபத்துக்கான ஆதாரங்களை சேகரிப்பர். தீ விபத்து ஏற்பட்ட போது கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை கருவிகள் வேலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.