

கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதும், போராட்டம் நீடிக்கிறது. இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் மைக்கேல் பிரவுன் உடலில் 6 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
செயின்ட் லூயிஸ் மாகாணம் பெர்குசன் நகரில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கேல் பிரவுன் ஒரு கடையிலிருந்து சுருட்டுகளை திருடிக் கொண்டு ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வெள்ளை இன போலீஸ் அதிகாரியான டேரன் வில்சன் என்பவர் மைக்கேல் பிரவுனை சுட்டுக் கொன்றார்.
இதைத் தொடர்ந்து கருப்பினத்தவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இனவெறி காரணமாகவே மைக்கேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதாக, கருப்பினத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளதால், பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கருப்பர் இனத்தவர் அதிகம் வசிக்கும் செயின்ட் லூயிஸின் புறநகர்ப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறை சோதனைச் சாவடியை நோக்கி பல ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். இதனால் போலீ ஸார் திணறி வருகின்றனர். இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுனின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க் நகர முன்னாள் தலைமை மருத்துவ பரிசோதனை அதிகாரி மைக்கேல் எம் பேடன் இது தொடர்பாகக் கூறும்போது,”மைக்கேல் பிரவுனின் உடலில் ஆறு துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் உள்ளன. இதில் 3 குண்டுகள் உடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை முழு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தனிப்பட்ட முறையில் பேடன் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தலைதூக்கியிருப்பதற்கு, இப்போராட்டமே சான்று எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறியுள்ளனர்.