போர் நிறுத்த உடன்பாடு முறிவுக்குப் பின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்வு
காஸாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் இஸ்ரேல் ராணுவ வீரரை தேடும் பணியையும் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 8,900 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான 72 மணி நேர போர் நிறுத்த உடன்பாடு, கடந்த வெள்ளிக் கிழமை அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே முறிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். இதில் ராபா பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் முறிந்ததற்கு ஹமாஸ் இயக்கத்தினர்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்ற துடன், மேலும் ஒருவரை கைது செய்து ஹமாஸ் இயக்கத்தி னர் அழைத்துச் சென்றுள்ள னர். அதனால்தான் மீண்டும் தாக்கு தலை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படு கிறது.
ஆனால், அமெரிக்க நாடு மற்றும் ஐ.நா. உதவியுடன் கொண்டு வரப்பட்ட மனிதாபிமான ரீதியிலான போர் நிறுத்தம் தொடங் குவதற்கு முன்புதான், இஸ்ரேல் ராணுவ வீரர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் ஹமாஸ் இயக்கம் கூறியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குவதை ஹமாஸ் இயக்கத்தினர் தீவிரப்படுத்தி யுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காஸா பகுதி யிலிருந்து ஏவப்பட்ட 51 ராக்கெட்டு கள் தங்கள் பகுதிகளை தாக்கிய தாகவும், 9 ராக்கெட்டுகளை வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக வும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதுவரை இப்போரில் 63 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 400 வீரர்கள் காயமடைந்தனர். 4 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஒபாமா குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, “போர் நிறுத்த உடன்பாட்டை ஹமாஸ் இயக்கம் மதித்து நடக்கும் என்ற நம்பிக்கை, இஸ்ரேலுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஏற்படாத பட்சத்தில் மற்றொருமுறை போர் நிறுத்தம் ஏற்படுவது சாத்தியமில்லை” என்றார்.
