

புதுடெல்லி: ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் ‛செல்பி' எடுத்து மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசவிருக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரியா இடையே 75 ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949-ல் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. அதன் மூலம் தூதரகங்களும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், ’’எங்கள் இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல புவிசார் அரசியல் சவால்களில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி பேச எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என பதிவிட்டிருந்தார்.
நெகம்மருக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரியாவுக்குச் செல்வது உண்மையிலேயே பெருமைக்குரியது. நமது நாடுகளுக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் புதிய வழிகளை ஆராய்வது குறித்த நமது விவாதங்களை எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதோடு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. வந்தே மாதரம் பாடலை அவர்கள் இசைப்பதை பார்க்கும்போது, அதை உணர முடிந்தது” என தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும், கடைசியாக இந்திரா காந்தி 1983 இல் பயணம் செய்தார்.