

லைபீரியாவில், சுகாதார மையம் மீது திருடர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் மீது உள்ள அச்சத்தால் 17 எபோலா நோயாளிகள் தப்பி ஓடியதாக லைபீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது லைபீரியாவில், எபோலாவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுக்காக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு மிகவும் கவலையடைந்துள்ளது.
எபோலா தொற்று நோயால் லைபீரியாவில் உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையிலும் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது. இதனை சந்திக்க முடியாத நிலையில் அந்நாடு சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் லைபீரியத் தலைநகரில், எபோலா தொற்றால் பாதுக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் சுகாதார மையத்திற்குள் புகுந்த திருடர்கள், அங்கு பயங்கரத் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த ரத்தம் படிந்த போர்வைகள், படுக்கை விரிப்புகள் என அனைத்தையும் திருடிச் சென்றனர்.
இதனால் சுகாதார விடுதியில் தங்க அச்சப்பட்டு, அங்கிருந்த எபோலாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தப்பி ஓடினர். இதனை முன்னதாக மறுத்த லைபீரிய அரசு, தற்போது 17 எபோலா பாதிப்பு உள்ள நோயாளிகள் தப்பி ஓடியதை உறுதி செய்துள்ளது.
தற்போது இவர்களை தேடும் பணியில் லைபீரிய அரசு ஈடுப்பட்டுள்ளது.
இதனிடையே, லைபீரியத் தலைநகர் மோன்ரோவியா மற்றும் அதன் மேற்கு பகுதியில் மட்டும், எபோலாவால் 400- க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், குறைந்ததது அந்த பகுதிகளில் 50,000 பேரையாவது எபோலா தொற்று ஏற்படுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து விமான நிலையத்திலும் சோதனை
லைபீரியாவில் எபோலா நோயாளிகள் தப்பியோடியதை அடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும், பயணிகளை நோய் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.