Published : 27 May 2018 10:19 AM
Last Updated : 27 May 2018 10:19 AM

உலக மசாலா: புது வகை போராட்ட உத்தி

த்திய ஆசியாவில் இருக்கும் துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் குர்பாங்குலி பெர்டிமாக்சிமேடவ், தன்னுடைய பிரத்யேகக் குணங்களால் உலகம் முழுவதும் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறார். திடீர் திடீரென்று ஏதாவது சட்டம் கொண்டுவருவதில் வல்லவர். இவரது ஆட்சியில் மக்கள் பலவிதத் துன்பங்களை அடைந்து வருகிறார்கள். இவருக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பதாலும் அதுதான் அதிர்ஷ்டம் என்று நம்புவதாலும் சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உள்ள கறுப்பு நிற கார்களுக்கு தடை விதித்தார். அந்த நாட்டில் பெயிண்ட் விலை அதிகம் என்பதால், லட்சக் கணக்கில் செலவு செய்து நிறத்தை மாற்ற முடியாமல் வாகன உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

தினமும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் அதிபர் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே விரக்தியில் இருக்கும் மக்கள், இந்தச் செய்திகளைக் கண்டு மேலும் கோபம் அடைந்தனர். அதிபரை எதிர்க்கும் வழி தெரியாமல், கழிவறையில் அதிபரின் படங்கள் இடம்பெற்ற செய்தித்தாள்களை டாய்லெட் பேப்பராகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, பலரும் அதிபர் படங்கள் இடம்பெற்ற செய்தித்தாள்களை டாய்லெட் பேப்பருக்கு பதிலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தங்கள் அதிபர் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற விஷயம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்துவிட்டது. செய்தித்தாள்கள் கிடைக்காவிட்டால், அதிபரின் படங்களைப் பிரிண்ட் எடுத்து கழிவறைக்குப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டனர். பிரிண்ட் எடுக்க வசதியில்லாத குழந்தைகள் அதிபரின் முகத்தை மீசை, தாடியுடன் ஒரு தாளில் வரைந்து கழிவறையில் பயன்படுத்துகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ அதிபருக்கு தெரிந்துவிட்டது. அதிபரின் படம் போட்ட செய்தித்தாள்களை கழிவறையில் பயன்படுத்தக் கூடாது என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை மக்கள் கண்டுகொள்ளவில்லை. உடனே அதிபர் கடும் கோபம் அடைந்தார். இந்தப் பிரச்சினையை கவனிப்பதற்காகவே ஓர் அமைச்சரை நியமித்தார்.

அந்த அமைச்சர், வீடு, பள்ளி, அலுவலகம் போன்ற இடங்களில் உள்ள கழிவறைகளை கண்காணிக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். காவல் துறையினரின் பரிசோதனையில் பள்ளிக் குழந்தைகள்தான் அதிக அளவில் அதிபரின் படங்களைக் கழிவறையில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதுவரை இந்த விஷயத்தை அனுமதித்த சுகாதாரப் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். “இவரது ஆட்சியில் வருமானத்துக்கு வழியில்லை. டாய்லெட் பேப்பர் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. எனவே, பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துகிறோம். அதிபரின் படங்களும் செய்திகளும் வராத நாட்களோ, செய்தித்தாள்களோ கிடையாது. நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்கின்றனர் மக்கள்.

இப்போதும் தேசிய செய்தித்தாள்களில் பக்கத்துக்குப் பக்கம் அதிபரின் படங்களே இடம்பெற்றிருக்கின்றன. சுகாதாரப் பணியாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் பள்ளிகளில் தினமும் குப்பைத் தொட்டிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புது வகையான போராட்ட உத்தியாக இருக்கிறதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x