Published : 29 May 2018 06:57 AM
Last Updated : 29 May 2018 06:57 AM

வளைந்து கொடுக்குமா வங்கதேசம்...?

பி

ரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் சந்தித்துப் பேசி உள்ளனர். அடுத்த நாள், மேற்குவங்க முதல்வர் மம்தாவும் ஹசீனாவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசி உள்ளனர்.

‘டீஸ்டா' நதிநீர் பங்கீடு, ரோஹிங்கியா அகதிகள் குடியேற்றம் ஆகிய 2 பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியாவுடன் இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என ஷேக் ஹசீனா விரும்புகிறார். இது பாராட்டுக்குரியது.

சாந்தி நிகேதன், விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில், ‘வங்கதேச பவன்’ தொடக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியுடன் அகதிகள் பிரச்சினை பற்றி பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்பாடு உள்ளிட்ட வேறு எந்த அம்சமும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றதாக செய்திகள் இல்லை.

பல்கலைக்கழக உரையில் ஷேக் ஹசீனா பேசும்போது, “11 லட்சம் அகதிகள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்து இருக்கிறார்கள். 16 கோடி மக்கள் தொகை கொண்ட எங்களால், 11 லட்சம் பேருக்கு உணவு அளிக்க முடியாதா? ஆனாலும், மியான்மர் அரசு தங்கள் நாட்டு மக்களை உடனே திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

‘ரோஹிங்கியா' அகதிகள் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு, சர்வதேச அரங்கில் பாராட்டு பெறவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் அகதிகளுக்கு தஞ்சமளிக்க மறுத்து வருகிறோம். நமது செயலுக்கான காரணங்கள் எத்தனை வலுவாக இருந்தாலும், இன்னமும் கூடுதலான மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டு இருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் இது விஷயத்தில், தன்னுடைய கடமையில் இருந்து இந்தியா முழுவதுமாக பின் வாங்கிவிடவில்லை. மியான்மர் நாட்டுடன் இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசி இருக்கிறார். “ரோஹிங்கியா அகதிகளைத் திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்றும் ராக்கைன் மாகாண கிராமங்களைப் புனரமைப்பு செய்வதில் உதவத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது” என்று வங்கதேச அமைச்சர் ஷரியர் ஆலம் பேசியதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, ‘டீஸ்டா' நதி நீர் பங்கீடு தொடர்பான உடன்படிக்கை விரைவில் எட்டப்பட வேண்டுமென்று ஹசீனா விரும்புகிறார். வங்கதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ‘டீஸ்டா' நதி நீர் பங்கீடு சுமூகமாக நிறைவேறினால் தேர்தலின்போது தனக்கு பெரிதும் உதவும் என்று ஹசீனா எதிர்பார்க்கிறார்.

பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு அடுத்த நாள், ஹசீனா - மம்தா பானர்ஜி இடையே அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடந்துள்ளது. “வங்க நண்பர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சில காலம் கொல்கத்தாவில் தங்கி இருந்தார். அவரின் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று கொல்கத்தாவில் அமைய வேண்டும் என்று ஹசீனா விரும்புகிறார். இதற்கு தேவையான நிலம் தருவதாகச் சொல்லி இருக்கிறேன்” என்று இந்த சந்திப்பின் போது மம்தா கூறியுள்ளார்.

ஆனால், டீஸ்டா நதி நீர் பிரச்சினையில், இந்திய - வங்கதேச நல்லுறவை விடவும், மாநில நலனையே மம்தா முன் நிறுத்துகிறார்.

ஓரளவாவது யாரேனும் விட்டுக் கொடுக்காமல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவே முடியாது. சுமார் 310 கி.மீ. நீளமுள்ள ‘டீஸ்டா' நதி, சிக்கிம் மாநிலத்தில் உருவாகி, மேற்குவங்கம் வழியாக, வங்கதேசம் செல்கிறது. இந்த நதி நீரில் இந்தியாவுக்கான பங்கு 55%. தனக்கு மிகக் குறைந்த நீரே கிடைப்பதாகவும், இதை அதிகப்படுத்துமாறும் வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

2011-ம் ஆண்டு இடைக்கால ஏற்பாடு ஒன்று தயார் ஆனது. அதன்படி, இந்தியாவின் பங்கு 42.5%; வங்கதேசத்துக்கு 37.5% என்று தீர்மானிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுத்த இந்த ஏற்பாடு, மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு காரணமாகக் கை விடப்பட்டது.

‘டீஸ்டா' நதி நீர் பங்கீட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தியா - வங்கதேசம் இடையே கலங்கடிக்கும் வேறு பிரச்சினை எதுவுமே இல்லை.

வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நெருங்குகிறது. உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் ஹசீனாவை நெருக்கக்கூடும். ‘விட்டுக் கொடுத்து' சுமூகத் தீர்வை எட்டுவதற்கு அரசியல் சூழல் இடம் தராமல் போகலாம். ஒரு வேளை, ‘பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம்' என்பது ஹசீனாவின் கணக்காக இருக்கலாம்.

ஆனாலும், நல்லுறவை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு, நழுவிப் போய் விட்டதாகவே தோன்றுகிறது. எந்த மாநிலம், எந்த நாடாக இருந்தாலும், நதி நீர் பங்கீடு, சாமான்யர்களையே பெரிதும் பாதிக்கிறது. ஆனால் அவர்களால் ‘பேச முடியாது'. தலைவர்கள் பார்த்துத்தான் நல்லது செய்ய வேண்டும். அவர்கள் மவுனம் சாதித்தால்...?Sign up to receive our newsletter in your inbox every day!

 
x