

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய தீவிரவாத செயலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை சி.ஐ.ஏ. புலனாய்வு நிறுவனம் சித்ரவதை செய்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மையப்பகுதியில் இருந்த இரட்டை கோபுரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ. சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை கைது செய்தது. அப்படி கைது செய்யப்பட்டவர்களை சி.ஐ.ஏ ஏஜன்டுகள் துன்புறுத்தியது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒபாமா கூறியதாவது: "இரட்டை கோபுரம், பெண்டகன் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க மக்கள் எவ்வளவு பெரிய அச்சத்திற்கு ஆளாகி இருந்தனர் என்பதை நினைவு கூர வேண்டியிருக்கிறது. அப்போது, சட்ட அமலாக்கத்துறையின், தேசிய பாதுகாப்பு குழுவினர் மீதான அழுத்தம் மிக, மிக அதிகமாக இருந்தது. நெருக்கடியான நிலையில் பணியாற்றிய அவர்கள் அனைவருமே தேசபக்தர்கள்.
இருப்பினும், 9/11 தாக்குதலுக்குப் பின்னர் நாங்கள் சில தவறான காரியங்களை செய்தோம். சிலரை மோசமாக துன்புறுத்தினோம். எங்கள் கொள்கைகளுக்காக எதிராக நாங்கள் சில காரியங்களை செய்ய வேண்டியிருந்தது. இவை நடந்தது ஏன் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் காரணமாகவே நான் அதிபர் பொறுப்பேற்ற பின்னர் புலன்விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டு வந்த சில மோசமான யுத்திகளுக்கு தடை விதித்தேன். மோசமான நடத்தை பொறுப்பேற்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த தவறு எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்"என கூறியுள்ளார்.
இந்நிலையில், சி.ஐ.ஏ ஏஜன்டுகள் சந்தேக கைதிகளை துன்புறுத்த பயன்படுத்திய யுத்திகள் குறித்து அமெரிக்க நிர்வாகம், அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.