

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடந்தப்பட்ட சோதனையில் பல விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நஜீப் பிரதமராக இருந்தப்போது அவரால் நியமிக்கப்பட்ட பொது நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் வரவில்லை என்றும் 700மில்லியன் டாலர்களை நஜீப் எடுத்துக் கொண்டதாகவும் எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை நஜீப் மறுத்து வந்தார்.
இந்தக் குற்றச்சாட்டின் முடிவுகள் மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தன.
நஜீப் ரசாக் தலைமையிலான ‘பரிசான் நேஷனல்’ கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கை மீதான அதிருப்தி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்த கட்சி, மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் மகாதிர் முகம்மது.
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு சொந்தமான இடங்களில் பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவில் சோதனை நடத்தப்பட்டது. இதில், நஜீம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து மலேசிய போலீஸார் கூறும்போது, "ஆடம்பர பைகள் அடங்கிய 284 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. நகைகள் அடங்கிய 72 பைகள் மற்றும் ஏராளமான ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டன" என்றார்.
ஊழல் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.