போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளி பயணம்: சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!

பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்
Updated on
1 min read

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார். இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார்.

இந்திய நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் பேரி வில்மோரும் பயணித்தார். ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்திய நேரப்படி இன்று (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் அடையும் என நாசா தெரிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலம் அவர்கள் இவரும் இந்த விண்கலனின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

59 வயதான சுனிதா வில்லியம்ஸுக்கு இது மூன்றாவது விண்வெளி பயணமாக அமைந்துள்ளது. அமெரிக்க கப்பல் படை விமானியான அவர், கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல் முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார்.

விண்ணில் நெடுநேரம் நடை பயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார்.

போயிங் ஸ்டார்லைனர்: ஸ்டார்லைனர் விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்தது. இதன் பின்னணியில் சுமார் பத்து ஆண்டு கால உழைப்பு உள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளி செல்ல விண்வெளி வீரர்களே வடிவமைத்த விண்கலன் இது என சொல்லப்படுகிறது. இதில் சுனிதா வில்லியம்ஸும் பணியாற்றி உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே இதில் விண்வெளி வீரர்களை அனுப்புவது என நாசா திட்டமிட்டது. இருந்தும் பல்வேறு முறை அந்த திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த ஜூன் 1-ம் தேதி அன்றும் இந்த விண்கலத்தின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தானது. இந்த சூழலில் தான் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் செயல்தன்மை குறித்த அறிக்கையை கொண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதன் ஒப்பந்த மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in