Last Updated : 02 Apr, 2018 07:13 PM

 

Published : 02 Apr 2018 07:13 PM
Last Updated : 02 Apr 2018 07:13 PM

உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கும்: மலேசியாவில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் ‘போலி செய்திகள்’ தடைச் சட்டம்

போலி செய்திகள் வெளியிட்டால் 6 ஆண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்திற்கு மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளன.

அதாவது பொய்ச்செய்தி, போலிச்செய்தி என்று முத்திரையிட்டு உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்து கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடுகிறது ஆளும் மலேசிய அரசு என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இந்தச் சட்டம் உள்நாட்டு ஊடகம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஊடகங்களையும் இலக்காக்கியுள்ளது. பிரதமர் நஜிப் ரஸாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விமர்சனங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியே இந்த ‘பொய்/போலிச் செய்தி சட்டம்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

நஜிப் ரஸாக் 3வது முறையாக பிரதமராக கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஒரு கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. நடப்பு நாடாளுமன்றத்தில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தச் சட்டம் அதன் அடிப்படையில் போலி செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 130,000 டாலர்கள் அபராதமும் விதித்திருந்தது. தற்போது எதிர்ப்புகளை அடுத்து சிறைத்தண்டனையை மட்டும் 6 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.

ஆனால் அமைச்சர் அஸாலினா ஆத்மான் கூறும்போது, “இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கவல்லது அல்ல. போலி செய்திகள் பரவலைத் தடுப்பதுதான்” என்று கூறுகிறார்.

ஆனால் ஜனநாயகச் செயல் கட்சியின் லிம் குவான் எங் கூறும்போது, “இந்த மசோதா உண்மையை மறைக்கப் பயன்படும் ஆயுதம். ஆகவே எது பொய்யோ அது உண்மையாகவும் எது உண்மையோ அது பொய்யாகவும் திரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது நம் நாட்டுக்கு அபாயகரமானது” என்றார்.

செனேட்டில் இந்தச் சட்டம் விவாதிக்கப்பட வேண்டுமென்றாலும் இது நிறைவேறி விடும் என்றே தெரிகிறது, காரணம் செனேட்டில் பாதிக்கும் மேல் ஆளூம் பாரிசன் தேசிய உறுப்பினர்களே உள்ளனர். இதற்கும் மேலாக ராயல் ஒப்புதலும் வேண்டும்.

இந்தத் தடைச் சட்டம் குறித்ஹு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், “கடுமையான ட்ராக்கோனியன் தண்டனைகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மலேசிய அரசியலை உலகம் முழுதும் விவாதிக்க தடை கொண்டு வரப்படுகிறது” என்று சாடினார்.

இந்நிலையில் இந்த போலி செய்திகள் தடைச்சட்டத்துக்கு உலகம் முழுதும் ‘சர்வாதிகாரப் போக்கு’ என்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x