Published : 21 Apr 2018 08:34 AM
Last Updated : 21 Apr 2018 08:34 AM

உலக மசாலா: கற்பனைக்கு எட்டாத கடலளவு சாதனை

கா

கிதக் கப்பல் செய்து தண்ணீரில் விடுவது என்றால் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 8 வயது ஓல்லி ஃபெர்குசன், 5 வயது ஹாரி சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய கப்பலை உருவாக்கினார்கள். கடந்த ஆண்டு மே மாதம் இந்தக் கப்பல், கடலில் விடப்பட்டது. மழை, காற்று, புயல், பேரலை என்று எல்லாவற்றையும் சமாளித்து இன்றும் கடலில் அழகாகத் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் ஆர்வத்தைக் கண்டதும் பெற்றோருக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. உடனே தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். பெரியவர்கள் செய்தது போலவே அத்தனை நேர்த்தியாகக் கப்பல் தயாரானது. இதைக் கடலில் மிதக்க விட வேண்டும் என்று சகோதரர்கள் கோரிக்கை வைத்தவுடன், கப்பல் மிதப்பதற்குத் தேவையான எடையை அதிகப்படுத்தினார்கள். தகவல் தொடர்பு கருவியை இணைத்தனர். பீட்டர்ஹெட் கடல் பகுதியில் மிதக்க விட்டனர். தற்போது கப்பல் கயானா நாட்டுப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. ‘அட்வஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறிய கப்பல் அவ்வப்போது கரையைத் தொடுவதும் உண்டு. அப்போது கரையில் உள்ளவர்கள் ‘கரை ஒதுங்கினால் மீண்டும் கடலில் விட்டுவிடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும் செய்தியைப் படித்துவிட்டு மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுகிறார்கள்.

“ஃபெர்குசனும் ஹாரியும் தாங்களாகவே கப்பல் செய்ய ஆரம்பித்தனர். குழந்தைகளின் ஆர்வத்தை நாங்கள் எப்போதும் தடை செய்ததே இல்லை. ஏதோ விளையாட்டுக்காகச் செய்கிறார்கள் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர்கள் மிக அழகான பொம்மைக் கப்பலை உருவாக்கிவிட்டார்கள். நண்பர்களும் அசந்து போனார்கள். இந்தக் கப்பலைக் கடலில் விட வேண்டும் என்று குழந்தைகள் கோரிக்கை வைத்தனர். கடலில் விட்டால் கப்பல் காணாமல் போய்விடும் என்று சொன்னோம். என்ன ஆனாலும் பரவாயில்லை, கப்பல் கடலில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் கப்பல் மிதந்து செல்வவதற்குத் தேவையான எடையை அதிகரித்தோம். ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினோம். அதனால் கப்பல் எங்கே செல்கிறது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தவுடன், கப்பல் குறித்த செய்திகளைத்தான் கேட்பார்கள். கப்பலுக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, கப்பல் குறித்த தகவல்களை எழுதி வருகிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் இந்தப் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள். கப்பலைப் பார்ப்பவர்கள் படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள். ஒராண்டை நெருங்கும் நேரத்தில் கடந்த வாரம் கப்பல் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டு விட்டதாக நினைத்தோம். கப்பல் இடத்தைவிட்டு நகரவில்லை. தகவல் தொடர்பு கருவிக்கு அனுப்பிய சமிக்ஞைக்குப் பதில் கிடைக்கவில்லை. வெற்றிகரமாக 300 மைல்களைக் கடந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தோம். ஆனால் மீண்டும் கப்பல் நகர ஆரம்பித்துவிட்டது” என்கிறார் மாக்நெயில் ஃபெர்குசன்.

கற்பனைக்கு எட்டாத கடலளவு சாதனை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x