Last Updated : 11 Apr, 2018 02:52 PM

 

Published : 11 Apr 2018 02:52 PM
Last Updated : 11 Apr 2018 02:52 PM

அமெரிக்க நாடாளுமன்றத்தி்ல் 5 மணிநேரம் விசாரணை: மன்னிப்பு கோரினார் ‘பேஸ்புக்’ ஸக்கர்பர்க்: தகவல் திருட்டை தடுக்க உறுதி

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடியது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்கிடம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி எம்.பி.களிடம் விளக்கம் அளித்தார்.

2016-ல் நடந்த அமெரிக்க தேர்தலில் போலியான செய்திகளை பரப்பிவிட்டது, ரஷியாவின் தலையீடு இருந்ததா உள்ளிட்ட கடினமான கேள்விகள் மார்க் ஸக்கர்பர்க்கிடம் எம்.பி.க்கள் கேட்டனர். ஏற்ககுறைய 5 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது.

அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த ஆப்ஸ் மூலமாக, 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது அம்பலமானது.இதனால் பேஸ்புக்கின் நம்பகத்தன்மை குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

நாடாளுமன்றத்தில் விளக்கம்

இதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்டார்.அவரிம் 44 எம்.பி.க்கள்(செனட் உறுப்பினர்கள்) பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். ஒவ்வொரு எம்.பி.க்கும் 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த விசாரணையின் போது, மார்க் ஸக்கர்பர்கிடம் பல கடினமான கேள்விகளை எம்.பி.க்கள் கேட்டனர். 2016ம் ஆண்டு அமெரி்கக அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததா, அவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டதா, போலியான செய்திகள் பரப்பிவிடப்பட்டதா என்பது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜான் துனே ஜுகர்பெர்க்கிடம் கேட்கையில், உங்கள் விருப்பத்துடன் அனைத்து விதமான தகவல்களும் பரிமாறப்பட்டதா என்று கேட்டார். இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எம்.பி.க்கள் ஸக்கர்பர்கிடம் கேட்டனர். எம்.பி.க்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஜுகர்பெர்க் பதில் அளித்தார்.

ஸக்கரபர்க் மன்னிப்பு

அதன்பின் ஸக்கர்பர்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேஸ்புக் என்பது முற்போக்கு சிந்தனை கொண்ட, நேர்மறையான கொள்கைகள் கொண்ட நிறுவனமாகும். உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே பேஸ்புக் ஆகும். ஆனால், அதில் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை.

தேர்தலில் தலையீடு, போலியான செய்திகள் வெளியிடுதல் போன்ற தவறுகள் நடந்துவிட்டன. இது மிகப்பெரிய தவறாகும், இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதற்கு மன்னிப்பும் கோருகிறேன்.

இனிவரும் காலங்களில் பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், தவறான தகவல்களை பரப்புவதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மக்களை ஒன்றாக இணைப்பது மட்டுமல்லாமல், அவர்களை பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கவும் முயற்சிக்கப்படும்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தவறான வழிகளில் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்த விவரங்கள் அனைத்தையும் அழிக்க கோரியுள்ளோம்.

போதிய அனுபவம் இல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தவறுகளை செய்திருக்கிறேன். தவறான நபர்களை நம்பினேன்; தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை நம்பியிருந்திருக்கக் கூடாது. அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன். இது முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, அலெக்ஸாண்டர் கோகன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே நடந்த நம்பிக்கை மீறலாகும்.

அதுமட்டுமன்றி, முகநூல் நிறுவனத்துக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த நம்பிக்கை மீறலாகும். எனவே, முகநூல் பக்கத்தில் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், பல மாற்றங்கள் செய்யப்படும்

இவ்வாறு ஜுகர்பெர்க் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x