Published : 29 Apr 2018 08:43 AM
Last Updated : 29 Apr 2018 08:43 AM

வங்கதேசத்தில் புயல், மழைக்காலம் தொடங்க போகிறது: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆபத்து; உடனடியாக நிதி ஒதுக்க ஐ.நா. வலியுறுத்தல்

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் ராணுவத்துக்கும் மோதல் வெடித்தது. உயிருக்குப் பயந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா. கணக்கிட்டுள்ளது. அவர்கள் வங்கதேசத்தின் காக்ஸ் பஸார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலைப்பாங்கான காக்ஸ் பஸார் பகுதியில் இட நெருக்கடி உள்ளது. மேலும் உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் அவர்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப ஐ.நா. தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த (ஐஓஎம்) ஜான் மெக்கியூ என்பவர், காக்ஸ் பஸார் அகதிகள் முகாமின் செயல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று கூறியதாவது:

வங்கதேசத்தில் மழைக்காலம் தொடங்கப் போகிறது. புயல் காற்று, பலத்த மழை போன்ற நேரங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் ஆங்காங்கே நடக்கும். இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேள்விக் குறியாக உள்ளது. உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துத் தர வேண்டும். அதற்கு புதிதாக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x