

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் காவல் துறை, ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், சக வீரர்களையோ நேட்டோ படை வீரர்களையோ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
தெற்கு உருஸ்கான் மாகாண காவல் துறை செய்தித் தொடர்பாளர் தூஸ்த் முகமது நயாப் கூறும்போது, “தலைநகர் டிரின் கோட் நகரில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு சக காவலர்கள் 7 பேரை சுட்டுக் கொன்ற ஒரு காவலர், அவர்களுடைய ஆயுதங்களை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவலருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.