Published : 20 May 2024 05:16 PM
Last Updated : 20 May 2024 05:16 PM

ரெய்சி மறைவு: ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் முதல் தற்காலிக அதிபர் நியமனம் வரை

இப்ராஹிம் ரெய்சியின் மறைவுச் செய்தியை வாசிக்கும் ஈரானிய பெண்.

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி நியமித்துள்ளார்.

5 நாள் தேசிய துக்கம் அறிவித்த ஈரான்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சயீத் இப்ராஹிம் ரெய்சி மற்றும் அவரது மதிப்புக்குரிய தோழர்கள் காலமானார் என்ற கசப்பான செய்தியை நான் மிகுந்த வருத்தத்துடனும் சோகத்துடனும் பெற்றேன். அதிபர் இப்ராஹிம் ரெய்சி தனது வாழ்நாளை தனது நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் இடைவிடாமல் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார்.

மக்களின் நல்வாழ்வு மற்றும் திருப்திக்கு அவர் முன்னுரிமை அளித்தார். இது கடவுளின் திருப்திக்கு சமம். அவர் ஒரு அறிஞர், திறமை மிக்கவர், கடின உழைப்பாளி மற்றும் பிரபலமான அதிபர். ஈரானிய தேசம் ஒரு நேர்மையான, அர்ப்பணிப்புள்ள மற்றும் மதிப்புமிக்க ஊழியரை இழந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் தேசிய துக்கத்தை அறிவித்த அயதுல்லா செயத் அலி காமேனி, ஈரான் மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி நியமித்துள்ளார்.

புதிய தற்காலிக அதிபர் நியமனம் - "நாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ, காணாமல் போனாலோ, நோய்வாய் பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ அவரது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம், ஈரானின் தேசிய தலைவரின் ஒப்புதலுடன் நாட்டின் முதல் துணை அதிபருக்கு மாற்றப்படும். 50 நாட்களில் தேர்தல் மூலம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டப்படி, தற்போதைய முதல் துணை அதிபரான முகமது மொக்பர், ஈரானின் அதிபராக 50 நாட்களுக்கு நியமிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் அரசின் தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி-யின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது மொக்பர்

தேர்தல் நடைபெறும் வரை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் நீதித்துறையின் தலைவருடன் ஒருங்கிணைந்து நாட்டின் விவகாரங்களை நடத்துவதற்கு முகமது மொக்பர் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் இல்லாமலேயே நீண்ட காலத்திற்கு ஒருவரை அதிபராக நியமிப்பதற்கான சிறப்பு அதிகாரம் ஈரான் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி உள்ளது என்றும் எனினும் அவர், அரசியலமைப்பின் படி செயல்படும் முடிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x