Published : 05 Apr 2018 09:22 AM
Last Updated : 05 Apr 2018 09:22 AM

ஹபீஸ் சயீது, தாவூத் இப்ராஹிம் உட்பட ஐநா கவுன்சில் தீவிரவாத பட்டியலில் 139 பாகிஸ்தான் அமைப்புகள் சேர்ப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 139 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள் ளன.

புதுப்பிக்கப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘டான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது, அவரது இயக்கமான லஷ்கர்-இ-தய்பா, மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் உட்பட பாகிஸ்தானைச் சேர்ந்த 139 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் இந்தப் பட்டியலில் உள்ள மொத்த எண்ணிக்கை பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

பாகிஸ்தானில்..

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் வசிக்கின்றனர், அங்கிருந்து செயல்படுகின்றனர் அல்லது பாகிஸ்தான் மண்ணிலிருந்தபடி தீவிரவாத செயலில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ள அய்மான் அல்-ஜவாஹிரி முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மறைந்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அவரது தளபதிகள் பலரும் அவருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொரு சர்வதேச தீவிரவாதியும் யேமனைச் சேர்ந்தவருமான ராம்ஜி முகமது பின் அல்-ஷீபா இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். கராச்சியில் கைது செய்யப்பட்ட இவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுபோல பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட மேலும் பல தீவிரவாதிகள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது, ஆப்கன் சப்போர்ட் கமிட்டி, லஷ்கர், அல் அக்தர் டிரஸ்ட இன்டர்நேஷனல், ஹர்கத்துல் ஜிஹாத் இஸ்லாமி, தெரீக்-ஐ-தலிபான் பாகிஸ்தான், ஜமாத்துல் அஹ்ரார் மற்றும் கதிபா இமாம் அல்-புகாரி ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க அமைப்புகள் ஆகும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x