Published : 20 May 2024 10:20 AM
Last Updated : 20 May 2024 10:20 AM

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி: யார் இவர்? - முழு பின்னணி

இப்ராஹிம் ரெய்சி

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் குறித்து அறிவோம்.

63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அயத்துல்லா காமெனியின் அடுத்த வாரிசாக அறியப்பட்டவர்: ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரெய்சி கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். அவரது நீதித்துறை சார்ந்த செயல்பாடு மற்றும் மத ரீதியிலான பற்று காரணமாக பரவலாக அறியப்பட்டவர்.

15 வயதில் ஈரான் நாட்டின் ‘Qom’ மத பாடசாலையில் பயின்றார். அப்போது இஸ்லாமிய அறிஞர்கள் பலரிடம் பாடம் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார். 1981-ல் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து தொடங்கிய அவரது நீதித்துறை பயணம் நாட்டின் தலைமை நீதிபதி வரை தொடர்ந்தது. 1983-ல் ஜமீலி அலமோல்ஹோதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

1988-ல் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இடதுசாரி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனையை அரசு வழங்கியது. அதனை மேற்பார்வையிடும் பொறுப்பை கவனித்தார். அதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்பைப் பெற்றார்.

ஈரான் மதத் தலைவர் மறைந்த கோமேனி மற்றும் தற்போதைய மதத் தலைவர் காமெனி உடன் நெருக்கமான தொடர்பை பெற்றவர். அது தவிர அரசு, ராணுவம் மற்றும் சட்டமன்றம் உட்பட நல்ல உறவை கொண்டிருந்தார்.

மக்கள் அதிருப்தியை பெற்ற அதிபர்: அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஆட்சியில் ஈரான் நாட்டு மக்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ஆட்சி மக்கள் அதிருப்தியை பெற்றிருந்தது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டின் செப்டம்பரில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து போது உயிரிழந்தார். அது அந்த நாட்டில் மிகப் பெரிய போராட்டமாக மாறியது.

வீதிகளில் அந்த நாட்டுப் பெண்கள், தங்களது ஹிஜாப்புக்கு தீயிட்டனர். பல மாத காலம் நீடித்த அந்தப் போராட்டத்தை அரசு தனது அதிகாரத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் உடனான மோதல் மீண்டும் வெடித்த போது அணுகுண்டு தயாரிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என ஈரான் தெரிவித்தது. ரெய்சி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x