ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: அறக்கட்டளை ஆய்வில் தகவல்

ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: அறக்கட்டளை ஆய்வில் தகவல்
Updated on
1 min read

வாஷிங்டன்: ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து 6,272 பேர் பங்கேற்றனர். அப்போது ஏஏஎன்எச்பிஐ சமூகம் பெரும் பாகுபாடுக்குள்ளானது தெரியவந்தது. அதன்படி, கடந்த 12 மாதங்களில் 32 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 29 சதவீதம் பேர் துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான ஆசிய அமெரிக்கர்கள் உடல்ரீதியான தாக்குதல் (41%) அல்லது இனம், மதம் காரணமான பாகுபாடுகளுக்கு (59%) ஆளாக்கப்படுவோம் என்ற பயத்தில் வாழ்வதாக தெரிவித்தனர். அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதில் சந்தேகம் அதிகரித்து வருவதால் ஆசிய அமெரிக்கர்கள் மீது அங்குள்ள மக்களின் அடக்குமுறை அதிகரித்து வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மூன்றில் ஒரு ஆசிய அமெரிக்கர் வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர்.

யோசனைகள்: இனவெறி பாகுபாட்டை குறைக்க மூன்று யோசனைகள் இந்த ஆய்வில் முன்மொழியப்பட்டன. அதில் ஒன்று, கே-12 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிய அமெரிக்கர்களின் வரலாற்றை கற்பிக்க வேண்டும். அமெரிக்க சமூகத்தில் ஆசிய அமெரிக்கர்களின் மீதான பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மேலும், ஆசிய அமெரிக்கர்களை மக்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in