Published : 26 Apr 2018 08:48 AM
Last Updated : 26 Apr 2018 08:48 AM

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் ஈரான் கடும் விளைவை சந்திக்கும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் மீண்டும் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களைக் குவித்து வருவதாகக் கூறி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தத் தடைகள் கடந்த 2015-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. இதற்காக, ஈரானுடன் கூட்டு செயல்திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டன. அணு சக்தி ஆராய்ச்சிகளை ஈரான் நிறுத்திக்கொண்டதன் பேரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டது.,

இதனிடையே, அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகக் கூடாது என்று பல்வேறு உலக நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், டொனால்டு ட்ரம்பிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், மேக்ரானின் கோரிக்கையை அதிபர் ட்ரம்ப் நிராகரித்துவிட்ட தாக தெரிகிறது. மேலும், ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது உறுதியாகிவிட்டதாக உலக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x