Published : 25 Apr 2018 09:53 AM
Last Updated : 25 Apr 2018 09:53 AM

உலக மசாலா: போட்டோஷாப் மேயர்

பி

ரேசிலின் அல்வோராடா பகுதியின் மேயராக இருக்கிறார் ஜோஸ் அர்னோ அப்போலோ. சமீபத்தில் இவரும் இவருடைய 2 உதவியாளர்களும் நகரில் நடைபெற்று வரும் அரசாங்கப் பணிகளைப் பார்வையிட்டதாக அதிகாரப்பூர்வமான பேஸ்புக் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. விளக்கமும் அளிக்கப்பட்டன. வேலை நடந்ததாகக் கூறப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மேயர் வராமல் இது எப்படி சாத்தியம் என்று அதிர்ந்து போனார்கள். இன்னும் சிலர் இந்தப் படங்களை ஆராய்ந்து, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் என்பதை நிரூபித்தனர். மேயருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் இடையே உள்ள தூரம், அந்தப் படத்துக்கும் இவர்களது படத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றவை இது போட்டோஷாப் என்ற உண்மையை வெளிப்படுத்திவிட்டன. இந்த விஷயம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவியவுடன் மேயர் அலுவலகம் அந்தப் படங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டது. ஆனால் இந்த விஷயத்தை வைத்து விதவிதமான மீம்கள் வெளிவந்துவிட்டன. மேயரும் உதவியாளர்களும் திரைப்படக் காட்சியில் தோன்றுவது, புகழ்பெற்ற மீட்பர் கிறிஸ்து சிலையின் கைகளில் நிற்பது, சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிற்பது போன்றெல்லாம் மீம்கள் வந்துவிட்டன. நிர்வாகம் இந்தச் செயலைக் கண்டித்திருக்கிறது. செய்யாத ஒரு வேலையைச் செய்ததாகச் சொல்லி, ஆதாரமாகப் படங்களையும் காட்டும்போது, அது இல்லை என்று நிரூபிக்க வேண்டியது மக்களின் கடமையாகிவிட்டது என்கிறார்கள் சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்கள்.

அட, மீம் போடுவதில் நம்மையும் மிஞ்சிவிட்டார்களே!

ஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது ட்ரூ, 4 நாட்கள் பயணமாகத் தனியாகப் பாலி தீவுக்குச் சென்றிருந்தார். எப்போதும் பெற்றோருடன் சூடான விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். சிறிது நேரத்தில் சரியாகிவிடுவார். ஆனால் அன்று அம்மாவுடன் பயங்கரமாகச் சண்டை போட்டார். அம்மாவின் கிரடிட் கார்டைத் திருடினார். யாரிடமும் சொல்லாமல் பாலி தீவுக்குக் கிளம்பினார். ட்ரூவின் குடும்பத்துக்கு மிகவும் பிடித்த இடம் பாலி. அடிக்கடி சென்றிருக்கிறார்கள். இந்த முறை பெற்றோர் இல்லாமல் தனியாகச் சென்று, மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தார். பெற்றோர் எழுதி கையெழுத்துப் போட்டதுபோல் ஒரு கடிதம் வைத்திருந்ததாலும் இவரை விமானத்தில் அனுமதித்துவிட்டனர். விமானப் பணியாளர்கள், அருகில் இருந்தவர்கள் என யாரிடமும் ட்ரூ பேச்சு கொடுக்கவில்லை. பாலியில் மட்டும் ஓர் அதிகாரி அம்மா எங்கே என்று கேட்டார். நான் கழிவறைக்குச் சென்று வருவதற்குள் வெளியேறிவிட்டார். வாயிலில் காத்திருப்பார் என்றார். தங்கும் விடுதியில் அறைக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டதால், பிரச்சினை வரவில்லை. வாடகைக்கு ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டார். பாலியைச் சுற்றி வந்தார். ட்ரூவைக் காணாமல் அவரது பெற்றோர் தேடினர். பாலி வந்திருக்கும் விஷயத்தை அறிந்தனர். உடனே வந்து சேர்ந்தனர். “12 வயது சிறுவன் தனியாக விமானம் ஏறியதை, எங்கள் நாட்டு விமான ஊழியர்கள் கேள்வி கேட்காதது அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இவரது அம்மா எம்மா. “சாகசப் பயணத்துக்குத் திட்டமிட்டேன். அதை செய்து முடித்தேன்” என்கிறார் ட்ரூ.

இதெல்லாம் ரொம்ப அநியாயம் ட்ரூ…!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x