Last Updated : 20 Apr, 2018 12:10 PM

 

Published : 20 Apr 2018 12:10 PM
Last Updated : 20 Apr 2018 12:10 PM

‘‘இந்தியாவில் என்ன நடக்கிறது? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்’’ - மோடியைக் கண்டித்த ஐஎம்எப் தலைவர்

இந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை, புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின்(ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டியன் லகார்டே தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார், அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால், மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த வாரம் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப்பேரணி நடத்தினார்கள். பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மவும் காத்த பிரதமர் மோடி, கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசுகையில், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்துக் கூட குறிப்பிடாமல், பொதுப்படையாகக் கண்டனம் தெரிவித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், மகள்களுக்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அதேசமயம், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தனது காஷ்மீர் பயணத்தில் போது ஜம்முவில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடுமையாக கண்டனத்தைப் பதிவு செய்தார். என்ன மாதிரியான சமூகத்தை வளர்த்திருக்கிறோம். சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளுக்குப் பின் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நடப்பது வெட்கக்கேடானது. இது தடுக்கப்படவேண்டும். அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது என்று கண்டித்தார்.

இந்நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே குழந்தைகள், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிகைக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் என்ன நடக்கிறது?, காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெண்கள் நலனுக்காக பெரும் புரட்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் பிரதமர் மோடி முதல் அனைத்து அதிகாரிகளும் பெண்கள், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இப்போதுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.

கடந்த பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். அங்குப் பிரதமர் மோடி நிகழ்த்திய பேச்சில், இந்தியாவில் உள்ள பெண்கள் குறித்து அதிகமான விஷயங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இது குறித்து பிரதமர் மோடியிடம் குறிப்பிட்டுப் பேசினேன். இதை ஒரு கேள்வியாக நான் அவரிடம் கேட்கவில்லை, எனது கருத்தை தெரிவித்தேன்.

இப்போது நான் தெரிவிக்கும் இந்த வருத்தமும், அறிவுறுத்தலும் கூட ஐஎம்எப் தலைவராகக் கூறவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x