Published : 11 Apr 2018 08:46 AM
Last Updated : 11 Apr 2018 08:46 AM

உலக மசாலா: உயில் போராட்டம்

ங்கிலாந்தைச் சேர்ந்த 79 வயது ஜோன் தாம்சன், 94 வயது வின்ஃபோர்ட் ஹோட்ஜுடன் அவர் இறக்கும்வரை 42 ஆண்டுகள் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் கோடீஸ்வரரான வின்ஃபோர்ட், தன்னுடைய சொத்துகளில் ஒரு ரூபாய் கூட ஜோனுக்கோ அவரது குழந்தைகளுக்கோ எழுதி வைக்கவில்லை. அவரது எஸ்டேட்டில் வேலை செய்யும் இருவருக்குச் சொத்துகளை எழுதி வைத்துவிட்டார்! இதனால் கையில் இருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, முதியோர் காப்பகத்தில் சென்று தங்கிவிட்டார் ஜோன். உடல்நலம் சரியில்லாததால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது. அவரால் தன்னுடைய மருத்துவக் கட்டணத்தைக் கூடக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடுகிறார்.

இறுதி 5 ஆண்டுகளில் புற்றுநோயால் அவதிப்பட்டார் ஹோட்ஜ். குறைந்தது 10 முறையாவது உயிலை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். கடைசியாக எழுதிய உயில் ஜோனுக்குச் சாதகமாக இருந்ததாக இவர்களது குடும்ப வழக்கறிஞர் கூறினார். ஆனால் அந்த வழக்கறிஞருக்கே தெரியாமல் 2016-ம் ஆண்டு வேறு ஓர் உயிலை எழுதி வைத்திருப்பது, ஹோட்ஜ் இறந்த பிறகே தெரியவந்திருக்கிறது. உயிலுடன் இருந்த கடிதத்தில், ‘என் மனைவி ஜோனுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அதனால் என்னை இறுதிக் காலத்தில் நன்றாகக் கவனித்துக்கொண்ட என்னுடைய இரு ஊழியர்களுக்குச் சொத்து முழுவதையும் பிரித்துக் கொடுக்கிறேன்’ என்று எழுதி வைத்திருக்கிறார். ஜோனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் அவரது நண்பர்கள். நீதிபதி ஜார்மன், அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். “ஜோன் 42 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுடன் ஹோட்ஜ் எஸ்டேடுக்கு வந்து சேர்ந்தார். பண்ணையில் வேலை செய்தார். ஹோட்ஜின் அம்மாவை அவர் வாழ்ந்தவரை அன்போடு கவனித்துக்கொண்டார். 2 ஆண்டுகளில் ஜோனைத் திருமணம் செய்துகொண்டார் ஹோட்ஜ். இந்த 42 ஆண்டுகளில் மனைவிக்கு உரிய அத்தனை பொறுப்புகளையும் கடமைகளையும் ஜோன் சிறப்பாகச் செய்திருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஆனாலும் ஹோட்ஜை அவரது உயிர் பிரியும்வரை நன்றாகக் கவனித்துக்கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் இதை உறுதி செய்திருக்கிறார்கள். ஹோட்ஜ் தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறியதால், இதில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. ஜோனுக்கும் அவரது குழந்தைகள் 4 பேருக்கும் எஸ்டேட் பங்களாவும் சில நிலங்களும் கொடுக்கப்படுகின்றன. ஹோட்ஜின் ஊழியர்கள் இருவருக்கும் வீடுகளும் சில நிலங்களும் வழங்கப்படுகின்றன” என்று தீர்ப்பளித்தார். திடீர் கோடீஸ்வரர்களான ஊழியர்களில் ஒருவர், தங்களுக்கு இவ்வளவு சொத்து வேண்டாம் என்றும் குழந்தைகள் படிப்புக்கும் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வதற்கும் உரிய பணம் கொடுத்தால் போதும் என்றும் சொல்லிவிட்டார். சக்கர நாற்காலியில் இருக்கும் ஜோனும் ஊழியர்களுக்குக் கொடுத்த சொத்து குறித்து எதிர்ப்பு காட்டவில்லை. இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடைவதாகச் சொல்லியிருக்கிறார்.

கோபத்தில் சொத்தை ஊருக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று சொல்வதுண்டு; இவர் நிஜமாவே எழுதி வைத்துவிட்டாரே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x