Published : 19 Apr 2018 10:06 AM
Last Updated : 19 Apr 2018 10:06 AM

டமாஸ்கஸ் பகுதிகளை மீட்க ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம் மீது சிரிய அரசு படைகள் குண்டு வீச்சு

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ் பகுதிகளை மீட்க, சிரிய படைகள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக கோரி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர ஐஎஸ் தீவிரவாதிகளும் பல நகரங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில், 2 மாதங்கள் கடும் சண்டைக்குப் பிறகு கிழக்கு கவுடா நகரை முழுமையாக ஐஎஸ் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து சிரிய படைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீட்டன.

இதையடுத்து ஐஎஸ் பிடியில் உள்ள மற்ற பகுதிகளை மீ்ட்கும் நடவடிக்கையில் சிரிய படைகள் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன. டமாஸ்கஸ் நகரில் உள்ள யர்முக், ஹஜார் அல் அஸ்வத், தடாமன், குதாம் ஆகிய பகுதிகள் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் யர்முக் பகுதி யில் பாலஸ்தீன அகதிகள் முகாமும் உள்ளது. இந்நிலை யில் யர்முக் மற்றும் ஹஜார் அல் அஸ்வத் பகுதிகளில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது சிரிய படைகள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இத்தகவலை சிரியாவில் உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு உறுதி செய்தது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டுமாயிர் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் விலக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நசிரியா, ஜய்ருட் ஆகிய பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான ‘சானா’ தெரிவித்துள்ளது.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x