Published : 03 May 2024 03:53 PM
Last Updated : 03 May 2024 03:53 PM

ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்

ருச்சிரா கம்போஜ்

புதுடெல்லி: எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதுவரின் தீங்கிழைக்கும் அநீதியான கருத்துக்களை இந்தியா சாடியுள்ளது.

பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா பொதுச்சபையில் ‘அமைதி கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் ஆகியவைகளை உள்ளடக்கி பேசியதற்கு இந்தியா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது.

ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: “இந்த அவையில், இச்சவாலான காலகட்டத்தில் அமைதிக்கான கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு நாம் முயலும்போது ஆக்கபூர்வமான உரையாடல்களில் எங்களின் கவனம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரதிநிதியின் கருத்துகளை ஒதுக்கி வைப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்.

அதன் அநீதியான மற்றும் தீங்கிழைக்கும் இயல்பினால் அக்கருத்துகள் நாகரிகமில்லாமல் இருப்பதுடன் நமது கூட்டுமுயற்சிகளை குறைப்பதாகவும் உள்ளது. நமது விவாதத்துக்கு வழிகாட்டக்கூடிய மையக் கொள்கைகளான மரியாதை மற்றும் ராஜதந்திரத்துடன் ஒத்துப்போகுமாறு அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட ஒரு நாட்டிடம் இதனைக் கேட்பது மிகையாக இருக்குமா?

அது முரண்பாடுகளை விதைக்கிறது, விரோதத்தை வளர்க்கிறது. மேலும் உலகளாவிய கலாச்சாரம் மற்றும் மத மரபுகள் ஆதரிக்கும் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்புகளை குறைத்து மதிப்பிடச் செய்கிறது. உண்மையான அமைதி கலாசாரத்தை வளர்ப்பதற்கும், உலகம் ஒரே குடும்பம் என எனது நாட்டின் நம்பிக்கைக்கும் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்.

தீவிரவாதம் என்பது அமைதி கலாச்சாரத்துக்கு நேர் எதிரானது. அனைத்து மதங்களும் இரக்கம், புரிந்துணர்வு மற்றும் கூட்டுவாழ்வு என்பதையே போதிக்கின்றன. மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்து வரும் சகிப்புத்தன்மை இல்லாதது, பாகுபாடு, மற்றும் வன்முறை நமது அவசரமான கவனத்தைக் கோருகின்றன.

தேவாலையங்கள், மசூதிகள், குருத்துவாராக்கள், கோயில்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இதுபோன்ற செயல்களுக்கு உலகளாவிய சமூகங்களின் உடனடி எதிர்வினை மற்றும் ஒருங்கிணைந்த பதில் அவசியம்.

அரசியல் எதிர்ப்புகளை தவிர்த்து நமது விவாதங்கள் இந்த விவகாரங்களை நேரடியாக கையாளுவது மிகவும் அவசியம். இந்தச் சவால்களை நாம் நேரடியாக கையாள்வதுடன், நமது கொள்கைகள், உரையாடல்கள் மற்றும் சர்வதேச ஈடுபாடுகளில் அவைகளே மையமாக இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இந்தியா இந்து, பவுத்தம், ஜைனம் மற்றும் சீக்கிய மதங்களின் பிறப்பிடம் மட்டும் இல்லாமல் இஸ்லாம், யூத மதம், கிறிஸ்தவம் போன்றவைகளின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாகவே துன்புறுத்தல்களுக்குள்ளான நம்பிக்கைகளுக்கு இந்தியா புகழிடமாக இருந்து வருகிறது, நீண்ட காலமாக பன்முகத்தன்மையை விளக்கி வருகிறது.

இத்தகைய குறிப்பிடத்தக்க மதம் மற்றும் மொழி ரீதியான பன்முகத்தன்மையால் இந்தியாவின் கலாச்சார கூட்டிணைவு சகிப்புத் தன்மைக்கு சான்றாக விளங்கி வருகிறது. இங்கு தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மத எல்லைகளைத் தாண்டி, பலதரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு, அன்பு பகிரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்தியா பெருமையுடன் இணைந்து வழங்கிய அமைதி கலாசாரத்துக்கான பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தின் பின்தொடருதல் என்ற தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக வங்கதேசத்தை இந்தியா பாராட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x