Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

ஐ.நா. சார்பில் விமான போக்குவரத்து பாதுகாப்பு குழு நியமனம்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.நா. சபை சார்பில் விமான போக்குவரத்து பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்த மலேசிய பயணிகள் விமானம் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து போர் பதற்றம் நிறைந்த பகுதிகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு குழுவை ஐ.நா.வின் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.சி.ஏ.ஓ. அமைப்பின் பொதுச் செயலாளர் ரேமண்ட் பெஞ்சமின் கூறியதாவது:

போர் பதற்றம் சூழ்ந்த பகுதிகள் குறித்த தகவல்கள், அச்சுறுத்தல்களை ஐ.நா.வின் புதிய குழுவிடம் 191 உறுப்பு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். இதுதொடர்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஐ.நா. சபை சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக புதிய விதிகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஐ.சி.ஏ.ஓ. ஆட்சி மன்றக் குழுத் தலைவர் பெர்னார்ட் கூறியபோது, உலகம் முழுவதும் பாதுகாப்பான வழிகள் எவை, எந்தெந்த பாதையில் விமானங்கள் பறக்கலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஐ.நா.வின் புதிய குழு ஆலோசனைகளை வழங்கும் என்றார்.

ஐ.நா.வின் இந்த நடவடிக்கையை சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் டோனி டைட்லர் வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது:

உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் விமானத்தை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகள் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி மலேசிய விமானம் அப் பகுதி வழியாகச் சென்றுள்ளது. மிகவும் பாதுகாப்பான உயரத்தில் அந்த விமானம் பறந்த போதும் துல்லியமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ஆபத்துகள், குறித்து விமான நிறுவனங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகள் இல்லை. இனிவரும் காலங்களில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடர்பான உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் மையமாக ஐ.நா. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழு செயல்படும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x