காஸாவில் நெஞ்சை உறைய வைக்கும் இஸ்ரேல் போர் விமானத் தாக்குதல்

காஸாவில் நெஞ்சை உறைய வைக்கும் இஸ்ரேல் போர் விமானத் தாக்குதல்
Updated on
2 min read

வெளியே சென்று வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு உதாரணமாக இருக்கிறது பாலஸ்தீனத்தின் காஸா பகுதி. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸா மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

காஸா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை என்றும் இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது.

28 நாட்களாக நீடிக்கும் போர் என்பதாலோ என்னவோ, தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள். இதில் சில விசித்திரமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

போரின் 24-வது நாளில், மதியம் 2.30 மணியளவில் காஸா நகரின் அல்-ஜல்லா தெருவில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று எங்கிருந்தோ வருகிறது இஸ்ரேலின் ஆளில்லா விமானம். அதிலிருந்து ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து குண்டு வீசப்பட்டது. அருகில் இருக்கும் வீடுகளின் வாசலில் இருந்து பார்க்கும் மக்கள் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து சாலைகளில் செல்வோர் அவசர அவசரமாக விலகிச் செல்கின்றனர்.

அந்த வீட்டின் மீது துல்லியமாக குண்டு விழுந்த அதே சமயத்தில், அந்த கட்டிடத்தில் வசிக்கும் பஷிர் அல்-ராம்லாவியின் மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வீட்டின் மீது குண்டு வீச்சு நடைபெறப் போகிறது, உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்தார்.

அப்போது ராம்லாவியின் உறவினர்கள் 35 பேர் அந்த கட்டிடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். தகவல் அறிந்ததும், ராம்லாவி மற்றும் உறவினர்கள் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறிய ரக குண்டு, வீட்டின் மீது விழுந்து புகையை கிளப்பியது. அதைத் தொடர்ந்து போர் விமானம் ஒன்று அங்கு வந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 குண்டுகளை வீசின. கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த பின்புதான் குண்டுவீச்சு நின்றது. அதுவரை சாலையோரங்களில் ஒதுங்கியிருந்த மக்கள், பின்னர் தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

இது போன்ற மிகவும் துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். சிறிய ரக குண்டு வருகிறது என்றவுடனே, மக்கள் முன்னெச்சரிக்கையாக அந்த இடத்திலிருந்து விலகிச் சென்று விடுகின்றனர். இந்த தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்த அதே நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

ராம்லாவியின் மகன் கூறும்போது, “எங்களின் தொலைபேசி எண்ணுக்கு யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கு குண்டு வீசப்போவது பற்றி இஸ்ரேல் ராணுவத்துக்கு மட்டுமே தெரியும். அந்த தகவலை இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர் என்றால், அவர்களுக்கு எனது தொலைபேசி எண் எவ்வாறு கிடைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது. அல்லது ஆளில்லா விமானம் வட்டமிட்டு வருவதைப் பார்த்து எனது வீட்டின் அருகில் வசித்தவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தனரா என்றும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், இப்போது எனது வீட்டை இழந்துவிட்டேன். மீண்டும் புகலிடம் தேடி அலைந்து வருகிறேன்.

ஹமாஸ் இயக்கத்தினருடன் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது எனது வீட்டை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது ஏன் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in