Last Updated : 12 Apr, 2018 03:09 PM

 

Published : 12 Apr 2018 03:09 PM
Last Updated : 12 Apr 2018 03:09 PM

பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் திட்டமிடப்படாத நடவடிக்கை: ரகுராம் ராஜன் சாடல்

 

பண மதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) மத்தியில் ஆளும் மோடி அரசால் முறையாக திட்டமிடப்படாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஒரேநாள் இரவில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை ஏற்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சாடியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தற்போது நியூயாரக்கில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசாரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் ரகுராம் ராஜன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி வரியையும் மிக மோசமான முறையில், திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தியதை கடுமையாகச் சாடினார்.

அவர் பேசியதாவது:

''இந்தியாவில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய சீர்திருத்தங்களாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி வரியையும் நடைமுறைப்படுத்தியது. இவை இரண்டுமே மிகச்சிறந்த நடவடிக்கைதான். ஆனால், அவை நடைமுறைப்படுத்திய விதம்தான் தவறானதாகும். ஒருவேளை சிறப்பாக, திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி இருந்தால் பலன்கள் நல்லவிதமாக கிடைத்திருக்கும்.

ஜிஎஸ்டி வரியிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் இருக்கும் தவறுகளை திருத்த முடியாமல் இல்லை. சரியாக திட்டமிட்டுப் பணியாற்றில் அதனால் விளைந்துள்ள தவறுகளைத் திருத்த முடியும். இந்த நேரத்தில்கூட அதற்கான நம்பிக்கையை நான் கைவிடவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது, மத்திய அரசு என்னிடம் ஆலோசிக்கவில்லை என்று கூறவில்லை. ஆனால், ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் போது, 'திட்டமிட்டுச் செயல்படுங்கள், எனக்கு இதை உடனடியாக அமல்படுத்துவதில் உடன்பாடில்லை' என்று தெரிவித்தேன்.

ஆனால், மிக மோசமாகத் திட்டமிட்டு, ஒரேநாள் இரவில், நாட்டில் மக்களிடம் 87.5 சதீவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நல்லவிதமான செயல் அல்ல.

என்னைப் பொறுத்தவரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாக, முறையாகத் திட்டமிடவில்லை, நன்றாக ஆழ்ந்து சிந்திக்கவில்லை. இதை அமல்படுத்தும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள் என்று அரசிடம் தெரிவித்தேன், செய்யவில்லை.

உலகில் உள்ள எந்த ஒரு பொருளாதார அறிஞரும் தெரிந்த விஷயம் என்னவென்றால், நாட்டில் 87 சதவீதம் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட பணத்தை செல்லாது என அறிவிக்கும் முன், அதற்கு ஈடாக மாற்று விகித்தில் மற்றொரு மதிப்பில் பணத்தை அச்சடித்து மக்களிடம் புழக்கத்தில் விடத் தயாராக வைத்திருக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்யவில்லை.

இதன் காரணமாக பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கையால், மக்களில் ஒரு சிலர் தங்களிடம் பதுக்கிவைத்திருந்த பணத்தை வரி செலுத்தப் பயன்படுத்தினார்கள், சிலர் அதையும் செலுத்தாமல் கோயில் உண்டியலில் செலுத்தினார்கள், சிலர் தங்கமாக மாற்றிக்கொண்டார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நீண்டகாலப் பாதிப்புகளைப் பார்த்துவிட்டோம், மக்கள் கைகளில் பணமில்லாமல் சாலைகளில் அலைந்தார்கள், கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, குறிப்பாக அமைப்புசாரா துறையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர், சிறு,குறுந்தொழில்கள் நசிந்தன, முடங்கின. பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதகமான விஷயங்கள் ஏதுமில்லை. அந்த நடவடிக்கை முக்கியமானதா என்பது கூட எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அந்த நேரத்தில் அரசுக்கு சரியாக இருந்திருக்கலாம், எனக்கு உடன்பாடில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமானோர் வரி செலுத்தும் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள், வரிகள் நிலுவை இல்லாமல் வசூலிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். வரி செலுத்துவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், ஆம், சிறிது பொறுத்திருந்து பாருங்கள், நீங்கள் சொல்வது உண்மையா, நீங்கள் நினைத்தது நடக்குமா என்று பாருங்கள்.''

இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x