Published : 29 Apr 2024 05:36 AM
Last Updated : 29 Apr 2024 05:36 AM

இப்போதெல்லாம் இந்தியர்களாக இல்லாவிட்டால் அமெரிக்காவில் சிஇஓ ஆக முடியாது: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவை

எரிக் கார்செட்டி

புதுடெல்லி: இப்போதெல்லாம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேராத வர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், 2024 இந்தி யாஸ்போரா ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது:

பார்ச்சூன் 500 நிறுவனங்களின் 10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர் களாக உள்ளனர். நீங்கள் இந்திய ராக இருந்தால் அமெரிக்க நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என்பது பழைய நகைச்சுவை. இப்போதைய நகைச்சுவை என்னவென்றால், நீங்கள் இந்தியராக இல்லையென்றால் அமெரிக் காவில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது. கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த இந்தியர்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தை சுந்தர் பிச்சை நிர்வகிக்கிறார். மைக்ரோசாப்ட் மற்றும் ஸ்டார்பக்ஸ் நிறுவனங்களை முறையே சத்யா நாதெல்லா மற்றும் லட்சுமண் நரசிம்மன் வழி நடத்துகின்றனர்.

கார்செட்டியைத் தொடர்ந்து பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வணிகத் தலைவர்களும் இதேபோன்ற உணர்வுகளை எதிரொலித்தனர், அதேநேரம் பிரதமர் மோடியின் தலைமையை வெகுவாகப் பாராட்டினர். குறிப்பாக இந்தியாவை புதுமை மற்றும் முன்னேற்றத்தின் உலகளாவிய மையமாகநிலைநிறுத்துவதில் பிரதமர் மோடியின் பங்கைப் பாராட்டினர்.

இன்பர்மேட்டிகா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அமித்வாலியா பேசும்போது, “உலக அளவில் இந்தியா மீதான பார்வை மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது மனித மூலதனத்தின் இடம். பிரதமர் மோடியால் செய்ய முடிந்தது என்னவென்றால், உலக முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா பக்கம் ஈர்த்ததுதான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x