

இந்தியா மற்றும் நேபாளத்தில் நிலச்சரிவு மீட்பு பணி மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பணிகளில் அந்நாடுகளின் அரசுகளுக்கு ஐ.நா. குழுவினர் உதவி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மாலின் கிராமத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். சுமார் 60 பேரை இன்னும் காணவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 350 பேர் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர் மழை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
மீட்புக்குழுவினர் இதுவரை 130 பேரின் உடல்களை இங்கிருந்து மீட்டுள்ளனர். மீட்பு பணிகளில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டு வந்தபோதிலும், பாங்காக்கில் உள்ள ஐ.நா. மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்திய அதிகாரிகளுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ளது.
இதுபோல வடகிழக்கு நேபாளத்தில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் இறந்தனர். இந்த நிலச்சரிவால் கோசி நதியில் நீரோட்டம் தடைபட்டு பெரிய ஏரி உருவாகியுள்ளது. இதில் உடைப்பு ஏற்படும்போது, பிஹார் மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதையொட்டி நேபாளம் மற்றும் பிஹாரில் கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவு மீட்பு பணி மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பணிகளில் இரு நாடுகளின் அரசுகளுக்கும் ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் உதவி வருகின்றனர்.