

முதலில் பிரிட்டன்தான் 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை தனது நாட்டை விட்டு வெளியேற்றியது. பதிலடியாக ரஷ்யா தனது நாட்டில் இருந்து அதே எண்ணிக்கையிலான பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. அடுத்து அமெரிக்காவும் தனது பங்குக்கு 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. பிரிட்டனுக்கு ஆதரவாக, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன. கவலையே படாமல் ரஷ்யாவும் பதிலுக்கு பதில் தனது நாட்டில் உள்ள அந்த நாட்டு தூதர்களை வெளியே அனுப்பி வருகிறது.
என்ன ஆச்சு..? ஏன் இந்த தூதரக வெளியேற்ற நடவடிக்கை..?
பிரிட்டனின் சாலிஸ்பரி பகுதியில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த டபுள் ஏஜெண்ட் செர்ஜி ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா மீது நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதல்தான் இத்தனைக்கும் காரணம்.
கடந்த மார்ச் 4-ம் தேதி சாலிஸ்பரியில் மகள் யூலியாவுடன் ஷாப்பிங் மால் செல்கிறார் ஸ்கிரிபால். இத்தாலியன் உணவகத்தில் இருவரும் சாப்பிடுகிறார்கள். அங்கிருந்து வெளியேறி ஒரு பாரில் சிறிதுநேரம் செலவிடுகிறார்கள். அங்கிருந்து வெளியே வந்ததும் திடீரென அங்கிருக்கும் பெஞ்சில் இருவரும் மயங்கி சரிகிறார்கள். போலீஸார் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.விசாரணையில் இருவருமே நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோவிசோக் எனப்படும் விஷவாயுவால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. கோமா நிலைக்கு சென்ற இருவரும் அதில் இருந்து இன்னும் மீளவில்லை. சிசிடிவி கேமரா பதிவுகளில் அவர்களை யாரும் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரியவில்லை. எனினும் ரஷ்யாதான் இருவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பது பிரிட்டனின் குற்றச்சாட்டு. இதை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவில் கர்னலாக இருந்தவர் செர்ஜி ஸ்கிரிபால். இங்கிலாந்தின் உளவுப் பிரிவுக்கு (எம்ஐ16) ரஷ்யாவின் முக்கிய ராணுவ தகவல்களைக் கொடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. 1990 முதல் இங்கிலாந்துக்கு உளவு பார்த்து பல லட்சம் டாலருக்கு மேல் பணம் பெற்றதாக ரஷ்யா குற்றம் சுமத்தியது. ஐரோப்பிய நாடுகளில் இருந்த 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய உளவாளிகள் குறித்த தகவல்களைக் கொடுத்து, அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படக் காரணமாக இருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. 1990-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து இவர் ஓய்வு பெற்ற பிறகும் ரஷ்ய ராணுவம் தொடர்பான முக்கிய ரகசியங்களை தொடர்ந்து பிரிட்டனுக்கு அளித்து வந்தார் என ரஷ்ய ராணுவம் கூறியது. 2004-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். ராணுவ கோர்ட்டில் நடந்த விசாரணையில் உளவாளியாக செயல்பட்டதை ஸ்கிரிபால் ஒப்புக் கொண்டார். 2006-ல் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கிய ராணுவ பட்டங்கள் பறிக்கப்பட்டன. ரஷ்ய செய்தித்தாள்கள், டிவியில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. இதுபோன்ற உளவு வேலைக்கு ரஷ்யாவில் கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த தண்டனை இதுதான்.
2010-ம் ஆண்டில் அமெரிக்காவில் உளவு வேலை பார்த்ததாக 10 ரஷ்ய உளவாளிகளை எப்பிஐ கைது செய்தது. அவர்களில் முக்கியமானவர் அன்னா சாப்மேன் எனப்படும் பெண் உளவாளி. ரஷ்யாவின் மிக அழகான இளம் உளவாளி என்ற பெயர் அவருக்கு உண்டு. அன்னா உட்பட அனைவரையும் விடுதலை செய்யும்படி ரஷ்யா வலியுறுத்தியது. அப்படி செய்வதற்கு, ரஷ்ய சிறைகளில் இருக்கும் 3 பேரை விடுதலை செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. அந்த 3 பேரில் ஒருவர் இங்கிலாந்துக்கு உளவு பார்த்த செர்ஜி ஸ்கிரிபால்.
உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் உளவாளிகளை இதுபோல் பரிமாறிக் கொள்வது உலக நாடுகளிடையே வழக்கம்தான். தங்கள் நாட்டு உளவாளியைக் காப்பாற்ற எந்த அளவுக்கு முயற்சி செய்வார்களோ அதேபோல், தங்களுக்காக உளவு பார்த்து கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் உளவாளிகளையும் காப்பாற்ற முயற்சி எடுப்பார்கள். அந்த வகையில், ஸ்கிரிபால் ரஷ்யராக இருந்தாலும், அவரைக் கைவிடாமல் காப்பாற்ற முடிவு செய்தது இங்கிலாந்து. ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தில் இந்த உளவாளிகள் பரிமாற்றம் நடந்தது. தங்களிடம் இருந்த 10 ரஷ்ய உளவாளிகளையும் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா. ரஷ்ய சிறைகளில் இருந்த ஸ்கிரிபால் உள்பட 3 பேரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது ரஷ்யா. அப்படி மீண்டு வந்தவர் தான் ஸ்கிரிபால்.
ஸ்கிரிபால் இங்கிலாந்தின் சாலிஸ்பரி பகுதியில் மனைவி லூட்மிலாவுடன் தங்கியிருந்தார். அங்கு குற்றங்கள் நடப்பது குறைவு என்பதால் அந்தப் பகுதியை தேர்வு செய்து அங்கு வசித்தார். அடுத்த ஆண்டே லூட்மிலா புற்றுநோயால் இறந்தார். அடுத்தும் சோகம் தொடர்ந்தது. ரஷ்யாவில் தங்கியிருந்த அவரின் 43 வயது மகன் அலெக்ஸாண்டர் திடீரென மரணமடைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு காதலியுடன் சுற்றுலா சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே மரணமடைந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவலாக பேச்சு எழுந்தது. ஆனால் தந்தையின் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோக புகாரால் மனம் உடைந்து குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அலெக்ஸாண்டர் இறந்ததாக அவருடைய அத்தையே சொன்ன பிறகுதான் பேச்சு நின்றது.
ஸ்கிரிபாலின் மகள் யூலியா தந்தையுடன் இங்கிலாந்தில்தான் தங்கியிருந்தார். ஆனால் மாஸ்கோ நினைப்பு அடிக்கடி வந்ததால் மீண்டும் ரஷ்யா திரும்பினார். தந்தையை பார்க்க அடிக்கடி இங்கிலாந்து வருவார். அப்படி வந்த நேரத்தில்தான் தந்தையுடன் சேர்ந்து விஷவாயு தாக்குதலில் நினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என ரஷ்யா மறுத்தாலும் இதற்கு முன்பு நடைபெற்ற பல மர்ம மரணங்களைப் பார்த்தால் ரஷ்யாவை நோக்கித்தான் சந்தேகக் கரம் நீளும். தமக்கு எதிராகப் பேசும் ரஷ்யர்களை காலி செய்வது ரஷ்யாவுக்கு புதிதல்ல என்கிறது அமெரிக்கா. இங்கிலாந்தில் இதுபோல் 14 பேரை தீர்த்துக் கட்டியுள்ளது ரஷ்யா என்கிறார் சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஸ்டீவன் ஹால். அவர்களில் ஒருவர்தான் அலெக்ஸாண்டர் லிட்வினெங்கோ. சுருக்கமாக லிட்.
முன்னாள் ரஷ்ய உளவாளியான லிட் இங்கிலாந்தில் செட்டில் ஆனவர். கடந்த 2006-ம் ஆண்டு லண்டன் ஹோட்டல் பாரில் லிட் அருந்திய டீயில் பொலேனியம் - 210 என்ற கதிரியக்க ரசாயனத்தைக் கலந்தனர். இந்த ரசாயனத்தால் உடனே மரணம் வராது. உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லிட், ஒரு வாரம் கழித்து இறந்தார். ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பேசி வந்ததால், இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. சாகும் தருவாயில் பேசிய லிட், என்னை நீங்கள் கொலை செய்து எனது குரலை அடக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் உங்களுக்கு எதிராக எழும் குரல்கள் நீங்கள் சாகும் வரை உங்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார். இதையும் வழக்கம் போல் மறுத்தது ரஷ்யா.
இந்நிலையில்தான் அதிரடியாக ரஷ்ய டிவிக்களில் யூலியா பேசும் ஒரு ஒலி நாடா ஒளிபரப்பானது. அதில், தான் நலமுடன் இருப்பதாகவும் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இது பிரிட்டனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் தங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது, எப்படி இந்த பேட்டி எடுக்கப்பட்டது என விசாரணை மேற்கொண்டது. வேறு வழியில்லாமல் பிரிட்டனும் யூலியா மற்றும் ஸ்கிரிபாலின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 1971 முதல் 1993 வரை ரஷ்ய விஞ்ஞானிகள் தயாரித்த கொடிய விஷவாயுக்கள் நோவிசோக் என அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த விஎக்ஸ், சோமன் போன்ற விஷவாயுக்களை விட பல மடங்கு வீரிய விஷத்தன்மை கொண்டவை. பிரிட்டனில் ஸ்கிரிபால், யூலியா மீது நடந்த தாக்குதலில் இந்த விஷவாயுதான் பயன்பட்டிருப்பதாக இங்கிலாந்து அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ நாடுகளில் விஷவாயுக்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் மூலம் இதைக் கண்டறிய முடியாது. மேலும் நேட்டோ நாடுகளின் விஷவாயு தடுப்பு முகமூடிகளை அணிந்திருந்தாலும் அதையும் தாண்டி ஊடுருவி தாக்கிக் கொல்லக் கூடியவை இந்த விஷவாயுக்கள். பயன்படுத்துவதற்கும் எளிதானவை என்பதால் இவை மிகவும் பிரபலம். இவை உடனே ஆளைக் கொல்வதில்லை. யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வீட்டில் கைப்பிடியில், தினமும் பயன்படுத்தும் டீ கோப்பையின் கைப்பிடியில், போன் ரிசீவரில் இந்த வாயுக்களை உமிழும் பொருட்கள் தேய்க்கப்படும். இதை சுவாசிக்கும்போது படிப்படியாக நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு 4 முதல் 6 வாரங்களில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை இந்த வாயுக்கள்.
அழகிய உளவாளி அன்னா சாப்மேன்
ரஷ்யாவின் பெண் உளவாளிகளிலேயே மிகவும் அழகானவர் அன்னா வாசிலியேவ்னா சாப்மேன். சுருக்கமாக அன்னா. இவரின் தந்தை கேஜிபி உளவு அமைப்பில் அதிகாரி. மாஸ்கோ பல்கலை.யில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறந்த ஆங்கிலப் புலமையுடன் மாடல் அழகியாகவும் இருந்திருக்கிறார். லண்டனில் நடந்த ஒரு பார்ட்டியில் அலெக்ஸ் சாப்மேன் என்பவரை சந்தித்தார். காதல் மலர்ந்தது. அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் மூலம் பிரிட்டன் குடியுரிமை கிடைத்தது. 2003, 2004-ம் ஆண்டுகளில் நெட்ஜெட்ஸ், பார்க்கிளேஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.
அவர் 2009-ல் நியூயார்க்கில் குடியேறினார். பிராப்பர்ட்டி பைண்டர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். உண்மையில் அவர் செய்தது உளவுத் தொழில். அரசு அதிகாரிகளுடன் நெருங்கி பழகி, ராணுவ ரகசியங்களைப் பெற்று அவற்றை ரஷ்யாவுக்கு அளித்து வந்தார். 2010-ல் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ரஷ்யா திரும்பிய அவர் டிவி ஷோ நடத்துகிறார்.