

ஒபாமாவின் தவறான வெளியுறவு கொள்கையால்தான், சிரியா மற்றும் இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாஷிங்டனிலிருந்து வெளியாகும் 'அட்லான்டிக் மன்த்லி' என்ற பத்திரிகைக்கு ஹிலாரி கிளின்டன் அளித்த பேட்டியில், "சிரியாவின் பூர்வீக மக்கள் தங்களது உரிமைகளுக்காக அந்நாட்டின் அதிபர் அசாதை எதிர்க்க துணிந்தபோது, அங்கு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதில் அமெரிக்கா தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. அந்த சமயத்தில் அங்கு இஸ்லாமியர்களுக்கும் மதசார்பற்றவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை ஜிகாதிகள் நிரப்பிவிட்டனர்" என்றார்.
மேலும், "சிரியாவின் முதற்கட்ட போரின்போது, ஒதுங்கி நிற்கக்கூடிய நிலையில் ஒபாமா முடிவெடுத்தார். அதன் விளைவாகவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாக ஜிகாதிகள் உருவெடுத்தனர். இவர்களே தற்போது இராக்கிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர்" என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளை ஹிலாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், "உலகின் பெரிய நாடுகள் முக்கியக் கொள்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளது. அந்த சமயங்களில் முட்டாள்தனமான செயல்படக் கூடாது" என்றார் ஹிலாரி.
இராக்கில் ஷியா தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவி அமைப்பான ஜிகாதிகளின் குழுக்கள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தி, அங்கு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சிரியாவின் சில பகுதிகளையும் இராக்கின் பகுதிகளையும் ஒருங்கிணைண்த்து சன்னி முஸ்லிம்களின் தனி நாடான 'இஸ்லாமி ஸ்டேட்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தாக்குதல் நடத்து, வளம் மிக்க நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் இழந்த இராக் அரசு, அமெரிக்க அரசின் உதவியை நாடியதை அடுத்து, அங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஒபாமாவின் முந்தைய அதிபர் ஆட்சி காலத்தில், அவரது அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராகவும் முக்கிய பங்கு வகித்தவருமான ஹிலாரி கிளின்டன், சமீப காலமாக தற்போதைய ஒபாமாவின் அமைச்சரவை சார்ந்த நடவடிக்கைகளிலிருந்து சற்று விலகியும் அவருக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.